சனல் - 4, இசைப்பிரியா, வெள்ளைக்கொடி விவகாரங்கள் உள்ளடக்கம்
ஐ.நா. அறிக்கையை விட மெக்ஸ்வல் பரணகம அறிக்கை பாரதூரமானது. அது ஏன் தற்போது வெளியிடப்பட்டது என புரியவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
வெள்ளைக்கொடி விவகாரம், சனல் 4, சார்ள்ஸ், இசைப்பிரியா போன்றோரின் படுகொலைகள் விசாரிக்கப்பட வேண்டும் என பரணகம அறிக்கை குறிப்பிட்டிருப்பது பாரதூரமான விடயம் என்றும் ஐ.நா. அறிக்கையோடு ஒப்பிடுகையில் பரணகம அறிக்கையே மோசமானது என்றும் அவர் தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் தொடர்ந்தும் இது தொடர்பில் குறிப்பிட்ட அவர், பரணகம அறிக்கையிலும் குறிப்பிட்டது போன்று சில நிபுணர்களின் ஒத்துழைப்பு பெறப்படலாம். வெளிநாட்டு நீதிபதிகளோ, வெளிநாட்டு நிபுணர்களோ ஒத்துழைப்பு வழங்கலாம்.
பங்கேற்பு எனும் போது பல்வேறு விதமான பங்கு பற்றல்களைக் குறிப்பிட முடியும். மஹிந்த ராஜபக்ஷவும் கூட சர்வதேச நிபுணர்களை நியமித்துள்ளார்.
அவர்களே பரணகம விசாரணையில் ஆலோசனை வழங்கினர். உண்மையில் பரணகம அறிக்கை ஐ.நா. அறிக்கையை விட பாரதூரமானது.
இச்சந்தர்ப்பத்தில் அந்த அறிக்கை வெளி யிடப்பட்டது மடமையென நான் கருதுகின்றேன். பரணகம அறிக்கையில் வெள்ளைக் கொடி சம்பந்தமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சனல் 4 சம்பந்தமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சார்ள்ஸ், புலித்தேவன், இசைப்பிரியா போன்றோரின் படுகொலை பற்றி கூறப்பட்டுள்ளது.
இவை உடனடியாக விசாரணைக்கு எடுக்கப்பட வேண்டும் என்று பரணகம அறிக்கை கூறுகின்றது. ஐ.நா. அறிக்கையில்
இது போன்ற விடயங்கள் குறிப்பிடப் படவில்லை. இது போன்று பெயரிடப்படவும் இல்லை என்பது குறிப்பிட த்தக்கது. தொழில்நுட்ப உதவி, கண்காணிப்பு உதவி அல்லது சட்ட ரீதியான உதவி அல்லது நீதிபதிகள் என்பதே அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிக்கையின் 20வது யோசனையில், மேற்குறிப்பிடப்பட்டுள்ள யோசனைகள் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அதன் இணக்கப்பாட்டுடனேயே நடைமுறைப் படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒன்றிலிருந்து 19 வரையான விடயங்கள் எமது அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கப்பாட்டுடனேயே நடைமுறைப்படு த்தப்படவுள்ளது. அரசாங்கம் இணக்கம் தெரிவிக்காவிட்டால் ஐ.நா. எதுவும் செய்ய முடியாது.
அத்துடன் இலங்கையின் இறைமை, ஆட்புல ஒருமைப்பாட்டை ஏற்றுக் கொள்வதை உறுதிப்படுத்திக் கொண்டு இந்த யோசனை முன்வைக்கப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
13வது திருத்தம் பற்றி குறிப்பிட்டுள்ள போது பொலிஸ், காணி அதிகாரம் என எதுவுமே குறிப்பிடப்படவில்லை. 13வது திருத்தத்தின் கீழ் மாகாண சபைகள் பலப்படுத்த உதவ வேண்டும் என்பதே குறிப்பிடப்பட்டுள்ளது.
எப்படி என்பதை அரசாங்கமே தீர்மானிக்கும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.