காலத்தை வீணடிக்காமல் வேலைத் திட்டங்களை ஆரம்பிக்க வேண்டும்
இலங்கை அரசியலமைப்பை மறு சீரமைப்பதற்குரிய உகந்த அரசியல் சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளமை யால் காலத்தை வீணடிக்காமல் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டுமென ஜனாதிபதியின் சட்ட ஆலோசகர் டொக்டர் ஜயம்பதி விக்கிரமரட்ன நேற்று தெரிவித்தார்.
காலம், அரசியல் சூழ்நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தலாம்.
தற்போது நிலவும் உறவுகள் பிளவ டையலாம் அல்லது புது உறவுகள் உருவாகலாம்.
எதுவாக இருப்பினும் அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கு சாதகமாக அமையுமா? என்பது சந்தேகம் என்பதனால் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையை தவறவிட்டுவிடக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதேவேளை 1972 மற்றும் 1978ஆம் ஆண்டுகளில் இடம்பெற்றது போல் எதிர்வரும் அரசியலமைப்பு மறுசீரமைப்பிலும் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழர்களின் கருத்துக்கள் உள்வாங்கப்படாவிடத்து அது அர்த்தமற்றதாகி விடுமெனவும் அவர் சுட்டிக் காட்டினார்.
லேக்ஹவுஸ் நிறுவனத்தில் நேற்று நடந்த ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்ட கருத்துக்களை முன்வைத்தார். லேக்ஹவுஸ் பயிற்சி பிரிவு இதனை ஏற்பாடு செய்திருந்தது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன், அரசியல மைப்பினை மறுசீரமைப்பது குறித்து மிகுந்த ஆர்வமாக உள்ளார். என்றபோதும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவிருக்கும் அரசியலமைப்பு மறுசீரமைப்பில் தமிழ் எம்.பிக்களின் கருத்துக்களை உள்வாங்கி வெளிநடப்பு செய்யாத வகையில் அவர்களை தக்கவைத்துக் கொள்ள அரசாங்கம் முயற்சிக்க வேண்டுமென்றும் அவர் கூறினார்.
தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பில் அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படவிருந்த 20வது திருத்தம் பொதுத் தேர்தலுக்கு குறுகிய இடைவெளிக்கு முன்னர் பாராளுமன்றில் அறிமுகம் செய்யப்பட்டதனாலேயே அது வெற்றிபெற முடியாமல் போனதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சர்வதேச உடன்படிக்கைகள் ஆகக் கூடியது 05 வருடங்களுக்குள்ளாயினும் உள்நாட்டில் சட்டமாக்கப்படவேண்டு மென தான் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரசியலமைப்பு மறுசீரமைப்பு முன்னெ டுக்கப்படுவதற்கு முன்னர் அதுகுறித்து நாடு முழுவதும் ஆராயும் வகையிலான குழுவொன்று உத்தியோக பூர்வமாக நிறுவப்படுவது அவசியமென வலியுறுத்திய அவர் பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் ஆரம்பிக்கும் வரை இது தொடர்பில் காத்திராமல் தனிநபர்களும் அமைப்புக்களும் தமது கருத்துக்களை தற்போது முதல் வெளியிட ஆரம்பிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.