23112024Sat
Last update:Wed, 20 Nov 2024

இன்று விஜயதசமி வெற்றித் திருநாள்

tkn 10 22 pn 44 hucணீலகெலாம் நிறைந்து விளங்குகின்ற எல்லாம் வல்ல ஆதி பராசக்தி அம்பிகைக்குரிய நவராத்திரி முடிந்து பத்தாம் நாள் வருகின்ற இனிய நன்னாள் விஜயதசமி வெற்றித்திருநாள் இன்றாகும். வழிபடும் அடியார் பெருமக்களின் அல்லல் போக்கி, இன்னல் நீக்கி, துன்பம் விலக்கி அருள் செய்யும் அம்பிகைக்குரிய பொன்னாள் தான் இன்றைய விஜயதசமி நன்னாள்.

மகிஷாசுரனை வதம் செய்து மானம்பூ திருவிழாவில் வாழையை வெட்டி, அந்நிகழ்வைப் பாவனை செய்து பக்தர்களுக்கருளும் பராபரியாக அம்பிகை அருளாட்சி புரிந்திடும் அதி உன்னத அருட்திருநாள் இதுவாகும்.

இந்த இனிய பொன்னான நன்னாள், நவராத்திரி நோன்பை அனுட்டித்த அடியார்களுக்கு விரதத்தைப் பூர்த்தி பண்ணுகின்ற ஒரு சிறப்பான நாளாகும். ‘விஜயதசமி’ எனப்படுகின்ற இன்றைய இந்தப் புனித நாள் சைவ மக்களுக்கு ஒரு தலை சிறந்த மகோன்னதம் நிறைந்த மகிமையுள்ள சிறப்புத் திருநாளாகும்.

இதில் இன்னொரு மேன்மை மிகு சிறப்பு என்னவென்றால் ஒரு மனிதனுக்குரிய அடிப்படைத் தேவையான கல்விச் செல்வத்தை முதன் முதலாக ஊட்டத் தொடங்குவதும் இந்த நன்னாளிலே தான். அதை ‘வித்தியாரம்பம்’ என்று சொல்வார்கள். குழந்தைப் பருவத்திலே ஆரம்பக் கல்வி போதிக்கத் துவங்கும் போது அந்த நிகழ்வு ‘ஏடு தொடக்குதல்’ என அழைக்கப்படும்.

அதாவது முன்னைய கால வழக்கப்படி பனை ஓலை ஏட்டிலேயே ‘அ, ஆ’ முழுக்க எழுதி அதனைக் கற்றுக் கொடுப்பார்கள். குழந்தையும் மிகுந்த ஆர்வத்தோடு தன்னுடைய ஒளிமயமான எதிர்காலத்துக்கு அத்திவாரமிடுகின்ற இந்த நிகழ்வில் மிகவும் குதூகலத்துடன் பங்குகொள்ளும். அந்த நேரத்தில் அந்தக் குழந்தையின் முகத்தில்தான் எத்தனை பிரகாசம்?

ஒன்றுமே அறியாப் பருவத்திலும் தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தை ஆரம்பிக்கின்ற இப்புனிதமான புண்ணிய சிறப்பு நிகழ்வு ஏடு துவக்குகின்ற குழந்தைக்கு ஆச்சரியமாகவும் இருக்கலாம். அது மிகவும் விருப்பத்தோடு கலந்து கொண்டு மகிழ்ச்சியடையும் மகோன்னத நிகழ்வும் இன்றைய விஜயதசமி நன்னாளேயாகும். வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும் தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவியாம் ஆதிபராசக்தியின் அம்சம் ‘கலைவாணி’ என்று அன்போடும் பக்தியோடும் மிகுந்த விருப்பத்தோடும் வணங்கி நிற்கும் சரஸ்வதித் தாயின் அருள் பெறும் ஆனந்த கோலாகல அற்புதத் திருநாள் இந்த விஜயதசமிதான் எனில் மிகையாகாது.

எல்லோரும் தத்தமது தொழில் செய்யும் கருவிகளை பூசையில் வைத்து வழிபாடியற்றுகின்ற ஆயுத பூஜை செய்யும் சிறந்த நாளான இன்றைய விஜயதசமி சைவ மக்களுக்கெல்லாம் ஒரு வரப்பிரசாதமாகும்.

இன்றைய இந்த நல்ல நாளில்தான் வம்சம் தழைக்க வந்த இளம் சிறார்களுக்கு சங்கீதம், வயலின், மிருதங்கம், தபேலா, புல்லாங்குழல் போன்ற இசை வல்லாளர்களிடம் ஆரம்பக் கல்வியைத் தொடங்குகின்ற நிகழ்வும் இடம்பெற்று வருகிறது. ஏனெனில் சங்கீதமோ அன்றி இசைக் கருவியோ பயில்வதற்கு நவராத்திரி காலமே சிறந்தது என்பது நம் முன்னோர் நம்பிக்கை. அதன் பயனாகவே நவராத்திரி வந்து சரஸ்வதி பூஜை செய்து முடிந்த கையோடு இன்றைய 10 ஆம் நாள் விஜயதசமியையே இசைப் பயிற்சி ஆரம்பத்துக்கும் நல்ல நாளாகக் கொள்கின்றனர்.

இது ஒரு புறமிருக்க சைவ ஆலயங்கள் தோறும் இன்றைய விஜயதசமியானது ஒரு பெரு விழாவாகக் கொண்டாடப்பட்டு அம்பிகையிடம் அன்பு வேண்டுதல் செய்யப்படுவது ஒரு சம்பிரதாயமாகப் பாரம்பரியமாகவே தொன்று தொட்டு நடைபெற்று வருகின்றது.

மேலும் இன்றைய விஜயதசமியை ‘தசரா’ என அழைத்து அம்பாளானவள் தவமிருந்து சிவனிடம் வரங்கள் பெற்று மகிஷாசுரன் எனப்படும் அசுரனைக் கொன்றொழித்ததால் இது வெற்றிவாகை சூடிய வெற்றித் திருநாள் என்றும் அரக்கர்களின் கொடிய கொடுங்கோல் ஆட்சியினின்றும் விடுதலை பெற்று நிம்மதிப் பெருமூச்சு விட்ட ஆறுதல் தந்து தேறுதலளித்த நல்ல நாள் என்றும் கருதப்பட்டு ஓர் அற்புதமான நிகழ்வும் நடத்தப்படுகின்றது.

இந்த விஜயதசமியிலேயே ‘வாழைவெட்டு’ என்று சொல்லப்படுகின்ற மானப்பூத் திருவிழாவும் நடைபெறுவது பெரு வழக்கமாகும். இந்த மானம்பூவில் ஒரு பெரிய விடயமே மறைந்து நிற்கின்றது பலருக்குத் தெரியாது. நவராத்திரி என்று விரதமிருந்து அம்பிகையின் அருள் வேண்டி பலர் நோன்பிருப்பார்கள். இந்த நோன்பு மகா நோன்பு எனப்பட்டது. எமது சைவ அன்பர்கள் தங்களுடைய வாய்க்குச் சுகமாக இருக்கட்டுமே என்று இன்றைய விஜயதசமியை மகா நோன்பு என்று சொல்லாமல் மானம்பூ என்று ஆக்கிவிட்டார்கள். அதாவது மகா நோன்பு என்பதே மானம்பூ என மருவிற்று என்று கூறப்படுகின்றது.

இன்றைய இந்த நல்ல நாளில் வாழை மரத்தை வெட்டி வீழ்த்தி அம்பிகை அரக்கனைக் கொன்றொழித்த மாதிரி நிகழ்வு நடத்தி வன்னி மரமாக நின்ற மகிஷாசுரனை வதம் செய்ததற்கு அடையாளமாக இந்த வெட்டப்படுகின்ற வாழை மரத்தில் வன்னிமர இலைகளைச் சொருகி வைப்பதும் நோக்கத்தக்கது.

ஆகவே கல்விப் பாரம்பரியத்துக்கு வித்திடும் நாளாகவும் இசைப் பயிற்சி ஆரம்பிக்கும் அற்புத நாளாகவும் பல்வேறு நல்ல விடயங்களுக்கு அத்திவாரமிடுகின்ற ஆனந்த கோலாகல நாளாகவும் திகழ்கின்ற இந்த விஜயதசமியை சைவப் பெருமக்கள் பெரிதும் காத்து, அம்பிகையிடம் வரம் வேண்டி வணங்கி வாழ்வு வளம்பெற்று நல்வாழ்வு பெற்றுய்வார்களாக.