23112024Sat
Last update:Wed, 20 Nov 2024

ஆணைக்குழு அறிக்கைகளை வெளியிடாது நல்லிணக்கம் பேசுவது அர்த்தமற்றது

cafe 2கபே’ அமைப்பு சுட்டிக்காட்டு

உடலாகம மற்றும் பரணகம ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை வெளியிடாமல் நல்லிணக்கம் மற்றும் இடைக்கால நீதி தொடர்பில் பேசுவது அர்த்தமற்றது என கபே அமைப்பும், மனித உரிமைகளுக்கான நிலையமும் சுட்டிக்காட்டியுள்ளது.

2016ஆம் ஆண்டுக்கான நிதிஒதுக்கீட்டுச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவிருக்கும் நிலையில், பாராளுமன்றத்தில் உள்ள கடும் போக்காளர்கள் இலங்கைக்கு எதிரான ஐ.நா பிரேரணையை மக்கள் மத்தியில் பிரசாரம் செய்வதற்கு முயற்சிப்பதாக அவை சுட்டிக்காட்டியுள்ளன.

இது தொடர்பில் கபே அமைப்பும் மனித உரிமைகளுக்கான நிலையமும் இணைந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஐ.நா பிரேரணையை நகரங்களில் உள்ளவர்கள் சாதகமாகப் பார்க்கின்றபோதும், சிங்கள சமூகத்தில் ஒரு பகுதியினரிடம் இது தொடர்பான சந்தேகம் காணப்படுவதாக நாம் நம்புகின்றோம்.

மனித உரிமை குற்றச்சாட்டுக்கள் மிகைப்படுத்தப்பட்டி ருப்பதுடன், பாதுகாப்புத் தரப்பினரை தண்டனைக்கு உட்படுத்தும் முயற்சிகள் என்று அவர்கள் நினைக்கின்றனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக இலங்கையின் சட்ட விவகாரத்தில் சர்வதேச விசாரணை யாளர்கள் நுழைந்துவிடுவார்கள் என்ற சந்தேகமும் இவர்களிடையே காணப் படுகிறது.

விமல் வீரவன்ச, உதய கம்பன்பில, தினேஷ் குணவர்த்தன போன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள், ‘தாய்நாட்டை பாதுகாக்கும் அமைப்பு’ என ஒன்றை உருவாக்கி ஜெனீவா தீர்மானத்துக்கு எதிராக தொடர்ச்சியான பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்தக் குழுவினர் எதிர்வரும் 22ஆம் 23ஆம் திகதிகளில் ஜெனீவா தீர்மானம் தொடர்பில் பாராளுமன்றத்தில் கருத்துக்களை வெளியிடவுள்ளனர்.

இவ்வாறான நிலையில் உள்ளக விசா ரணைகளான உடலாகம மற்றும் பரணகம ஆணைக்குழுக்களின் விசாரணை அறிக்கைகள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். இந்தக் குழுக்கள் முன்னாள் ஜனாதிபதியால் அமைக்கப்பட்டிருந்தவை என்பதுடன், இவற்றுக்கும் சர்வதேச நிபுணர்கள் பயன்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்த இரண்டு ஆணைக்குழுக்களும் பாதிக்கப்பட்ட தரப்பினர் உட்பட பல்வேறு தரப்புக்களுடன் பரந்தளவான சாட்சியங்களைப் பதிவுசெய்துள்ளன. எனவே இந்த இரண்டு விசாரணை அறிக்கைகளையும் வெளியிடாமல் நல்லிணக்கம் பற்றியோ அல்லது இடைக்கால நீதி தொடர்பிலோ பேசுவது அர்த்தமற்றது என்பதே தமது நிலைப்பாடு என கபே அமைப்பும், மனித உரிமைகளுக் கான நிலையமும் சுட்டிக்காட்டியுள்ளன.