கண்டி நகர அபிவிருத்தி தொடர்பில் பல்வேறு நிறுவனங்களினால் முன்வைக்கப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களில் உள்ளடக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு நகர சபை, மாகாண சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை உள்ளிட்ட சகல நிறுவனங்களும் சகல அமைச்சர்களும் அலுவலர்களும் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியமாகும் என்றும், அத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் ஒழுங்குகள் குறித்து எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் மாநகர அபிவிருத்தி அமைச்சர் மற்றும் அமைச்சுடன் கலந்துரையாடி முடிவு செய்ய முடியும் என்றும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.
நேற்று (15) பிற்பகல் கண்டி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற கண்டி மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்திலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
முன்வைக்கப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களில் உள்ளடக்கப்பட்டுள்ள ஏனைய முன்மொழிவுகள் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டதோடு, கண்டி நகரத்திற்கு பெரும் பிரச்சினையாகவுள்ள வாகன நெரிசல் மற்றும் கழிவுகள் பிரச்சினை தொடர்பாகவும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இங்கு குறித்த பிரச்சினைகளை தீர்ப்பதற்காக தேவையான காணிகளை கண்டறிவதற்கான பணிகளை ஆரம்பிக்கும்படியும் அதன்மூலம் ஏற்படக்கூடிய மக்கள் எதிர்ப்பு மற்றும் ஏனைய விடயங்கள் குறித்தும் விளக்கிய ஜனாதிபதி, உயர் தொழில்நுட்ப முறைமையைப் பயன்படுத்தி அவற்றை தீர்த்துக்கொள்ள முடியுமென்றும் இங்கு சுட்டிக்காட்டினார்.
புதிய அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் அபிவிருத்தி செயல்திட்டங்கள் தொடர்பாக மாவட்ட நிர்வாக மற்றும் மாவட்ட அரசியல் பிரதிநிதிகளுக்கு இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.
அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியல்ல, எஸ்.பி.திசாநாயக்க, துமிந்த திசாநாயக்க மற்றும் மஹிந்தானந்த அளுத்கமகே, கெஹலிய ரம்புக்வெல்ல, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க உள்ளிட்ட பிரதேச அரசியல் பிரதிநிதிகளும் பாராளுமன்ற மற்றும் மாகாண சபை அமைச்சர்கள், ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேகோன், ஜனாதிபதியின் மேலாதிக செயலாளர் ரோஹண கீர்த்தி திசாநாயக்க உள்ளிட்ட பிரதேசத்தின் சகல அரசாங்க நிறுவன பிரதிநிதிகளும் அலுவலர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.