உண்ணாவிரதப் போராட்டம் இருக்கும் சிறைச் கைதிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமாயின் அதற்கான பொறுப்பினை அரசாங்கமே ஏற்றாக வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் நேற்று தெரிவித்தார்.
இதேவேளை, தாங்கள் விடுதலை செய்யப் போவதாக உறுதியான வாக்குறுதி கிடைக்கும் வரை அல்லது ஜனாதிபதியின் இறுதி தீர்மானம் தெரியும் வரை
தமது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடப் போவதில்லையென்ற உறுதியான நிலைப்பாட்டிலேயே சிறைக் கைதிகள் இருப்பதாகவும் சுமந்திரன் எம்.பி. கூறினார்.
வெலிக்கடை நியு மகசின் சிறைச் சாலையில் உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுத்து வரும் சிறைக் கைதிகளை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த சுமந்திரன் எம்.பி. சிறைக்கைதிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால்? என எழுப்பப்பட்ட வினா வுக்கு பதிலளிக்கையிலேயே சுமந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது : இவ்விவகாரம் குறித்து எமது கட்சித் தலைவர் சம்பந்தன் ஜனாதிபதியை சந்தித்து பேசவுள்ளார்.
எல். ரீ. ரீ. ஈ. தலைவர்களாகவிருந்த கேணல் பதுமன், கே. பி. ஆகியோரே எவ்வித குற்றச்சாட்டுக்களும் இல்லையென விடுதலை செய்யப்பட்டிருக்கும் நிலையில் பலர் அமைச்சு மற்றும் முக்கிய பதவிகள் வழங்கி உயர்ந்த ஸ்தானங்களில் வைத்து கெளரவிக்கப்படும நிலையிலும் எதற்காக எம்மை மாத்திரம் அரசாங்கம் சிறை வைக்க வேண்டுமென்பதே சிறைக் கைதிகளின் கேள்வியாகும்.
இதனைத் தான் நாமும் நீதியமைச்சரிடம் கேட்கின்றோம். சுமார் 02 வருட காலத் துக்குள் 12 ஆயிரம் பேரை புனர்வாழ்வளித்து விடுதலை செய்ய முடியுமானால் எதற்காக இவர்கள் மட்டும் சிறைவைக்கப்பட்டுள் ளார்கள்?
சிறைக் கைதிகளும் நாமும் (நல்லாட்சி) அரசாங்கம் சரியான முடிவை பெற்றுத் தருமென தொடர்ந்தும் எதிர்பார்த்திருக்கி றோம். இந்த சிறைக் கைதிகள் 19 வருடங்களாக சிறைகளுக்குள் இருக்கின்றனர். இவர்களது வழக்கு விசாரணைகள் துரிதப்படுத்தப்ப ட்டிருப்பதால் தண்டனைக் காலம் முடிவடைந்து இவர்கள் எப்பொழுதோ வெளியே வந்திருப்பார்கள்.
மூன்று வருடங்களுக்கு முன்னர் ஒரு மாத காலத்தில் இதற்கான தீர்வு பெற்றுத் தரப்படுமென பாராளுமன்றத்தில் கூறப்பட்டது. இதற்காக, இதுவரையில் 74 ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டி ருப்பதால் சிறைக் கைதிகளுக்கு இதன் மீது நம்பிக்கை இல்லை.
இந்தப் பிரச்சினைக்கும் அரசாங்கம் ஆணைக்குழு நியமிப்பதுடன் நின்றுவிடு வதனால் தாம் மரணித்தால் தான் இந்தப் பிரச்சினையிலிருந்து தீர்வு கிடைக்குமென நம்பியே இவர்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டவர்களுள் பெரும்பாலா னவர்கள் தமிழர்கள், இதில் சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்களும் உள்ளனர். இவர்கள் அனைவர் மீதும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவே ஆணையாளர் கூறுகின்றார்.
இவர்களை எவ்வித காரணமுமின்றி விடுதலை செய்ய முடியுமா? இல்லையா? என்பது குறித்து அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னரே தெரிய வரும் என நீதியமைச்சர் கூறியுள்ளார்.
இதில் எமக்கு சாதகமான பதில் கிட்டுமென நம்பிக்கை உள்ளது. வீணான இழுத்தடிப்புக்காகவே மனம் வருந்துகின்றோம்.
எல். ரீ. ரீ. ஈ. சந்தேகநபர்கள் என எமது சட்டத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. இவர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள். இவர்களை தமிழ் அரசியல் கைதிகள் என கூறுவதே பொருத்தமானதாக இருக்கும். தற்போது இவர்களை எவ்வாறு அழைப்பது என ஆராய்வதிலும் பார்க்க இவர்களின் விடுதலையே முக்கியத்துவம் பெற்றுள்ளது என்றும் அவர் கூறினார்.