ஜனாதிபதியின் கண்காணிப்பின்கீழ் ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் குறித்த அமைச்சர்களின் தலைமையில் தேசிய மட்டத்தில் தொழிற்சங்க ஆலோசனை சபையை அமைப்பதற்கு ஜனாதிபதி அனுமதியளித்துள்ளார்.
தொழிற்சங்க பிரதிநிதிகள் குழுவொன்று நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்து கலந்துரையாடியபோதே ஜனாதிபதி இந்த அனுமதியை வழங்கினார்.
பத்தாயிரம் ரூபா கொடுப்பனவை அரசாங்க ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்துடன் இணைக்கவும் தேசிய ஊழியர் ஆலோசனை சபையில் அரசாங்க மற்றும் தனியார்த்துறையின் சம பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தவும் டெலிகொம் மற்றும் ஏனைய பகுதியளவு அரசாங்க நிறுவனங்களில் ‘மேன்பவர்’ ஊழியர்களை நிரந்தரமாக்குதல், தனியார்த்துறை ஊழியர்களுக்கு 2500/= ரூபா சம்பள உயர்வுக்கு பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற்றுக்கொள்ளுதல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அரசாங்க சேவை ஆணைக்குழுவை தொடர்ந்தும் சுயாதீன ஆணைக்குழுவாக தாபித்தல், சம்பள ஆணைக்குழுவை மறுசீரமைப்பு செய்தல், அக்ரகார காப்புறுதி திட்டத்தின் குறைபாடுகளை சரி செய்தல், சம்பள உயர்வு, போக்குவரத்து பிரச்சினைகளை தீர்ப்பதற்காக சகல அரசாங்க ஊழியர்களுக்கும் மோட்டார் சைக்கிள்களை பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் மற்றும்; முன்மொழிவுகள் உள்ளிட்ட ஆவணம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
அரசாங்க சேவையின் வினைத்திறனை அதிகரிப்பதற்காக செயல்திட்டம் ஒன்றை வடிவமைப்பதற்கு உயர்மட்ட குழுவொன்றை அமைப்பது தொடர்பிலும் இதன்போது தொழிற்சங்க பிரதிநிதிகள் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.
இந்நிகழ்வில் தொழிற்சங்க ஒருங்கிணைப்பாளர் சமன் ரத்னபிரிய, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின், தனியார் பஸ் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன ஆகியோர் உள்ளிட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.