'வெலே சுதா' என அழைக்கப்படும், கம்பள விதானகே சமன்த குமாரவிற்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஹெரோயின் போதைப் பொருள் 7.06 கிராமை தன்வசம் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை போன்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட இவர், கொழும்பு உயர் நீதிமன்றத்தில் இன்று (14) ஆஜர்படுத்தப்பட்டார்.
குறித்த குற்றங்கள் நீரூபணமானதை அடுத்து, நீதிபதி பிரீதி பத்மன் சுரசேனவினால் மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஜனாதிபதி குறிப்பிடும் திகதி மற்றும் நேரத்தின் அடிப்படையில் வெலிக்கடை சிறையில், உயிர் பிரியும்வரை கழுத்தில் சுருக்கிட்டு தூக்கில் இடுமாறு நீதிபதி இதன்போது உத்தரவிட்டார்.
குறித்த நபர், கல்கிஸ்ஸை நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள பிரதேசத்தில், ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டிலேயே இவர் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவருடன், அவரது நண்பர் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருந்ததோடு, சிறையில் ஏற்பட்ட கலகம் ஒன்றின் போது, அவர் மரணமானமை குறிப்பிடத்தக்கது.
நீதிமன்றில் சாட்சியம் அளித்த வெலேசுதா, தனது தந்தையின் தென்னை மர தோட்டத்தில் கிடைக்கும் தேங்காய், அன்னாசி மற்றும் முட்டை போன்றவற்றை விற்றே தான் பணம் சம்பாதித்ததாகவும், தனக்கு எழுத, வாசிக்க தெரியாத போதிலும் தனது மூன்று குழந்தைகளும் கொழும்பிலுள்ள சர்வதேச பாடசாலைகளில் கல்வி கற்று வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
கொழும்பு 07 இலுள்ள வீடு, கொழும்பின் மத்திய பிரதேசத்திலுள்ள காணி மற்றும் எரிபொருள் விற்பனை நிலையமும் காணப்படும் தனக்கு அதிசொகுசு வாகனமும் இருப்பதாக அவர் சாட்சியமளித்தார்.