16072024Tue
Last update:Wed, 08 May 2024

பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காத கட்சிகளும் பேச்சில் பங்கேற்க வேண்டும்

anandasangaree 380 seithyஇனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படும் பட்சத்தில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காத தமிழ்பேசும் மக்களின் கட்சிகளையும் இணைத்துக் கொள்ள வேண்டுமென தமிழர் விடு தலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி ஆலோசனை தெரிவித்துள்ளார்.

அனைத்துத் தரப்புப் பிரதிநிதிகளையும் உள்ளடக்கியதான குழுவொன்றே பேச்சுவார்த்தையில் பங்கேற்க வேண்டும். இதற்கென அனைத்துத் தரப்பினர் கொண்ட விசேட குழுவொன்று அமைக்கப்பட வேண்டுமென வும் ஆனந்தசங்கரி தெரிவித் துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வுக்கு அவர் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

இனப்பிரச்சினை சம்பந்தமாக விரைவில் நடவடிக்கை எடுக்கவிருப்பதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். ஜப்பானிய பாராளுமன்றத்தில் நீங்கள் ஆற்றிய உரையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனும் வேறு அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டு விட்டதெனவும் விரைவில் தீர்வுகாணப்படும் என்றும் கூறியுள்ளார்கள்.

உள்ளூர் பத்திரிகைகளில் பல்வேறு இடங்களில் நீங்கள் ஆற்றிய உரைகளில் “பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கின்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவிருப்பதாக நீங்கள் கூறிவருவது சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.

பேச்சுவார்த்தையில் ஈடுபட விரும்புபவர்களோடு, பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காத தமிழ் பேசும் மக்களின் கட்சிகளையும் இணைந்துக் கொள்ள வேண்டும் என மிகவும் வினயமாக கேட்டுக் கொள்கின்றேன். ஒரேயொரு கட்சியுடன் மட்டும் பேசுவதால் அது உரியபலனை தராது பாதிப்பையே ஏற்படுத்தும்.

கடந்த காலங்களில் இனப்பிரச்சினை சம்பந்தமாக குறிப்பிட்ட சில அமைப்புகளுடன் மட்டும் நடந்த பேச்சுவார்த்தைகள் அத்தனையும் தோல்விகளிலே முடிந்துள்ளன. அதன் விளைவுகளால் எமது மக்கள் இன்றுவரை துன்பங்களை அனுபவிக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட குழுவினரை திருப்திப் படுத்துவதற்காக நடாத்தப்படுகின்ற இவ்வாறான பேச்சுவார்த்தைகள் ஒட்டுமொத்த தமிழினத்துக்கும் விடிவை பெற்றுத் தராது. எனவே கடந்தகால அனுபவங்களை கருத்திற்கொண்டு அந்தத் தவறுமீண்டும் நடக்காதவாறு அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய ஒருவிசேட குழுவை உருவாக்கி பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படவேண்டும். அரசியலில் பலமான கட்சி பலமிழந்து போவதும், பலமிழந்துபோன கட்சி மீண்டும் பலமடைவதும் மிகச் சர்வ சாதாரணமான விடயம்.

தமிழர் விடுதலைக்கூட்டணி ஒரு மிதவாத கட்சி. 2004ம் ஆண்டு எவ்வாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிரதிநிதித்துவம் முற்றாக அழிக்கப்பட்டது என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றேன். உங்களுடைய தேசிய அரசாங்கத்தில் ஏனைய தமிழ் கட்சிகளின் நிலைப்பாடு என்னவென்பதை அறியவிரும்புகிறேன்.