இலவசக் கல்வி, இலவச சுகாதாரம் வறுமை ஒழிப்புக்கு கூடுதல் நிதி
பொருளா தாரத்தில் புரட்சியை ஏற்படுத்தக் கூடிய வகையிலான வரவுசெலவுத்திட்டமே எதிர்வரும் நவம்பர் மாதம் 20ஆம் திகதி முன்வைக்கப்படவிருப்பதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
இலவசக் கல்வி, இலவச சுகாதார சேவைகள், வறுமை ஒழிப்பு உள்ளிட்ட துறைகளுக்கான முழுமையான நிதி ஒதுக்கப்படும். அதில் எதுவித குறைப்பும் மேற்கொள்ளப்படாது. அத்துடன் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கக் கூடியதான வரவுசெலவுத்திட்டமொன்றே இம்முறை முன்வைக்கப்படவிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
வரவுசெலவுத்திட்டத்தைத் தயாரிப்பதற்கு துறைசார் வல்லுனர்களிடமிருந்து ஆலோசனைகள் எதிர்பார்க்கப்படுவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இதுவரை சுமார் 300ற்கும் அதிகமான யோசனைகள் கிடைக்கப்பெற்றிருப்பதாகவும் கூறினார்.
இலங்கையின் பொருளாதார நிலைமை தொடர்பில் நாட்டு மக்களுக்கு விளக்கமளிப்பதாகக் கூறியிருந்தபோதும், எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி அரசாங்கத்தின் கொள்கை தொடர்பாக விளக்கமளிக்கவுள்ளதால், அதன் பின்னர் வரவுசெலவுத்திட்டம் சமர்ப்பிப்பதற்கு முன்னர் இலங்கையின் பொருளாதார நிலைமை தொடர்பில் தான் விளக்கமளிக்கவிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
வாகன இறக்குமதி மற்றும் வாகன லீசிங் தொடர்பில் வரவுசெலவுத்திட்டத்தில் உறுதியான நிலைப்பாடு அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.