ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹுசெய்னின் கருத்துக்கு காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் முன்னாள் நீதவான் மெக்ஸ்வல் பரணகம கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
காணமல் போனவர்கள் தொடர்பிலான ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அதிருப்தி வெளியிட்டுள் ளதாகவும் இதனால் சுயாதீன மானதும் பக்கச் சார்பற்றதுமான ஓர் விசாரணைக் குழுவினை நிறுவ வேண்டுமென அல் ஹுசெய்ன் கோரியிருந்தார்.
எனினும் தமது ஆணைக்குழுவினை விடவும் வேறும் எவராலும் இந்தப் பணியை சிறப்பாக செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மிகவும் வெளிப்படைத் தன்மையுடன் தமது ஆணைக்குழு பணிகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிதுள்ளார்.
மக்களிடம் சாட்சியங்கள் திரட்டும் போது இராணுவத்தினரோ அல்லது காவல் துறையினரோ அந்த அறைகளில் இருந்ததில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு, கிழக்கில் பல அமர்வுகள் நடத்தப்பட்டு 19,000 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதில் 16,000 பேர் வடக்கு, கிழக்கைச் சேர்ந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
300 பேர் வருவார்கள் என எதிர்பார்த்து அறிவிப்பு விடுத்தால் 1000 பேர் வருவதாகவும் எவரும் தமது ஆணைக் குழுவின் விசாரணைகளை நிராகரிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமர்வுகள் மாலை வரையில் நடைபெற்றால் விசாரணைகளில் பற்கேற்போர் வீடு செல்ல தேவையான போக்குவரத்து வசதிகளைக் கூட ஏற்பாடு செய்திருந்ததாகத் தெரிவித்துள்ளார். விசாரணைகளுக்கு தீர்வு வழங்க சில காலம் எடுக்கும் என்பதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும் அவரிடம் நேரத்தை ஒதுக்கி அறிக்கை சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளார்.