சூடான வாதப் பிரதிவாதங்கள்; புதிய அரசின் செயற்பாடுகளுக்கு பல்வேறு நாடுகளும் வரவேற்பு
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமை விவகாரம் தொடர்பான விவாதம் நேற்று நடைபெற்றது. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் வெளியிடப்பட்ட விசாரணை அறிக்கையை பல்வேறு உலக நாடுகள் வரவேற்றிருந்ததுடன், அதனை நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தியிருந்தன.
இலங்கையில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்களை அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் வர வேற்றிருந்ததுடன், ஐ.நா மனித உரிமை உறுப்பு நாடுகள் உரையாற்றுவதற்கு 3 நிமிடங்களும் பார்வையாளர் நாடுகளுக்கு 2 நிமிடங்களும் வழங்கப்பட்டன. இலங்கையின் செயற்பாடுகள் தொடர்பில் கருத்துப் பரிமாற்றங்களும் இடம்பெற்றன.
இலங்கையிலுள்ள சகல மக்களின் மனித உரிமைகளையும் உறுதிப்படுத்துவதற்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்து செயற்படுவதுடன், சர்வதேசத்தின் உதவிகளைப் பெற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாக ஐ.நாவுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்தார்.
இலங்கை மீதான ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் விசாரணை அறிக்கை தொடர்பான விவாதம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ஜனவரி 8ஆம் திகதி எமது நாட்டில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மாற்றத்துக்காக மக்கள் வாக்களித்திருந்தனர். அதன் பின்னர் நாட்டில் இடம்பெற்ற விடயங்கள் பற்றி உங்கள் அனைவருக்கும் தெரியும்.
தண்டனையிலிருந்து தப்பும் கலாசாரம் காரணமாக பல தசாப்தங்களாக மக்களின் உரிமைகள் மீறப்பட்டன. இவ்வாறான சூழ்நிலையிலேயே காலாசார ரீதியில் தொடர்புகளை ஏற்படுத்தி ஒருவருக்கு ஒருவர் மரியாதையாக நடத்தப்படும் சூழல், சுதந்திரமான ஜனநாயக நிறுவனங்களின் செயற்பாடு, சட்டத்தின் ஆட்சி, நல்லாட்சி, கருத்துச் சுதந்திரம் போன்றவற்றை உள்ளடக்கிய புதிய இலங்கையொன்றுக்கான தேவையையே மக்கள் வலியுறுத்தியிருந்தனர்.
அபிவிருத்தியிலும் விட நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கே அரசாங்கம் முன்னுரிமை அளிக்கும் என ஜனாதிபதியும் பிரதமரும் கூறியுள்ளனர்.
நாட்டு மக்களுக்கான நன்மைகளை உறுதிசெய்யும் நோக்கில் சர்வதேச சமூகத்துடன் இலங்கைக்கான உறவுகளை உடனடியாகப் புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும், நிலையான கொள்கைகள் மற்றும் அரசியல் நிலைப்பாட்டை ஏற்படுத்துவதற்கு மிகவும் அவசியமான தேசிய அரசாங்கத்தை கடந்த ஓகஸ்ட் 17ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் ஜனாதிபதியும், பிரதமரும் இணைந்து ஏற்படுத்தியுள்ளனர்.
சகல பிரஜைகளின் மனித உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்து வதற்கான எதிர்காலத்தை ஏற்படுத்துதல், சர்வதேச சமூகத்துக்கு மதிப்பளித்து செயற்படுதல், சமத்துவம், சுதந்திரம் மற்றும் நீதி ஆகியன தொடர்பான சர்வதேச நியதிகளை உறுதிப்படுத்துதல் போன்ற மனநிலையைக் கொண்டுள்ளது.
கடந்த செப்டெம்பர் 14ஆம் திகதி எமது வெளிவிவகார அமைச்சர் நல்லிணக்கம், மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் மற்றும், உண்மைகளைக் கண்டறிதல், கடந்தகாலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் மீள நடைபெறாதிருப்பதை உறுதிப்படுத்தல், பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கு ஏற்படுத்தப்படவிருக்கும் பொறிமுறைகள் குறித்து விளக்கமளித்திருந்தார்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் நாம் வழங்கியிருந்த எழுத்துமூல பதிலிலும் இந்த விடயங்களைக் கூறியிருந்தோம். ஐ.நா மனித உரிமைகள் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்ட பரிந்துரைகள் மற்றும் அதன் உள்ளடக்கங்கள் கவனத்தில் கொள்ளப்படும் என நாம் உறுதியளித்திருந்ததுடன், புதிய பொறிமுறையை அமைப்பது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்பிலும் கவனம் செலுத்தியுள்ளோம்.
இவ்வாறான நிலையில் நாம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர், அவருடைய அலுவலகம் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் முறைமை ஆகியவற்றுடன் இணைந்து செயற்படுவ தற்கான பாதையைத் தேர்ந்தெடுத்திருப்பதுடன், சகல பிரஜைகளின் மனித உரிமையை பாதுகாப்பதற்கு சர்வதேச சமூகம் உள்ளிட்ட பங்காளிகளுடன் இணைந்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆலோசனைகள் மற்றும் உதவிகளைப் பெறுவதும் இதில் உள்ளடங்கும்.
இலக்கை அடையும் நோக்கில் பேரவையில் அங்கம் வகிக்கும் ஏனைய நாடுகளுடன் இணைந்து இலங்கையும் இந்தப் பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கியிருப்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். தொடர்ந்தும் உங்களுடைய உதவிகளை எதிர்பார்க்கின்றோம்.
அதேநேரம் கடந்த ஆறுமாதங்களாக மத ரீதியான குழப்பங்கள் தணிந்துள்ளதைக் காணக்கூடியதாகவுள்ளது. முஸ்லிம்கள், கிறிஸ்தவ மதங்களுக்கிடையில் குழப்பநிலையொன்று ஏற்பட்டதாக அறிக்கைகள் கிடைத்திருந்தன. 2014ஆம் ஆண்டு பெளத்த குழுவான பொதுபலசேனா அமைப்பு அளுத்கமவில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக நடத்திய தாக்குதல்கள் தொடர்பில் எதுவித விசாரணைகளும் நடத்தப்படவில்லை.
சமூகங்களுக்கிடையில் சகிப்புத்தன்மையை ஏற்படுத்தல், விரும்பத்தகாத பேச்சுக்களை குற்றவியல் குற்றங்களாக்குதல் மற்றும் வன்முறைகள் தூண்டுவதைத் தடுத்தல் போன்றவற்றை ஊக்கப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை இது வலியுறுத்துகிறது என்றார்.
உலக நாடுகள் வரவேற்பு
இலங்கை தொடர்பான விடயத்தில் கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு உறுப்பு நாடுகளுக்கு 3 நிமிட நேரமும், பார்வையாளர் நாடுகள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு 2 நிமிட நேரமும் வழங்கப்பட்டிருந்தது.
இதில் பல உலக நாடுகள் இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கையை வரவேற்றிருந்ததுடன், அதன் பரிந்துரைகளை நிறைவேற்றுவதன் அவசியத்தையும் வலியுறுத்தியிருந்தன.
சர்வதேசத்துடன் இணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு இலங்கை முன்வந்திருப்பதை வரவேற்பதாக ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது.
இலங்கையின் உள்ளகப் பொறிமுறையின் கீழ் மனித உரிமை விடயத்தைக் கையாள்வதற்கு உதவும் வகையில் முன்னணி வழக்கறிஞர் ஒருவரை அடுத்த மாதம் இலங்கைக்கு அனுப்பவிருப்பதாக ஜப்பான் தெரிவித்தது. தேசிய ரீதியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு ஜப்பான் தொடர்ந்தும் உதவத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தது.
இலங்கை தொடர்பாகக் கொண்டுவரப்பட்டிருக்கும் பிரேரணை முடிவல்ல ஆரம்பம் எனத் தெரிவித்திருக்கும் பிரித்தானியா, இதில் உள்ளவற்றை நடைமுறைப்படுத்துவதில் மேலதிகமான அர்ப்பணிப்புத் தேவை என்றும் கூறியுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கை விரிவாக எடுத்துக்காட்டியிருப்பதாக ஜேர்மன் குறிப்பிட்டுள்ளது.
புதிய அரசாங்கத்தின் ஆரம்பகட்ட நடவடிக்கைகள் வரவேற்கும் விதத்தில் இருந்தாலும், தொடர்ச்சியாக மேலும் பல செயற்பாடுகள் முன்னெடுக் கப்படவேண்டியிருப்பதாக இவ்விவாதத்தில் கருத்துரைத்த அமெரிக்கப் பிரதிநிதி தெரிவித்தார்.
இதில் காணப்படும் சவால்களை வெற்றிகொள்வதற்கு அரசாங்கம், மக்கள் மற்றும் சர்வதேச சமூகம் இணைந்து செயற்படும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்து ள்ளது.
இவ்விவாதத்தில் கலந்துகொண்ட கனடா பிரதிநிதி, பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்துவதற்கு சர்வதேச சமூகத்தின் பங்களிப்பு அவசியம் என்ற விடயத்தை சுட்டிக்காட்டுவதாகக் கூறினார்.