ஹைட்பார்க் திறப்பு விழாவில் பிரதமர்
ஐ. நா. மனித உரிமை பேரவைக்கு இணங்க விசாரணைக்காக அமைக்கப்படும் பொறிமுறையானது இலங்கையின் அரசியலமைப்புக்கு உட்பட்டதாகவே அமையும் என பிரதமர் ரணில் விக்கிர மசிங்க தெரிவித்தார். அத்தோடு இது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் பாராளுமன்றத்தின் முழுமையான அங்கீகாரத்துடனேயே மேற்கொள்ளப்படும் என்றும் உண்மை, நல்லிணக்கத்துக்கே முக்கியத்தும் வழங்கப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
கொழும்பு ஹைட்பார்க் சந்தியிலுள்ள பிலிப் குணவர்தன விளையாட்டரங்கு புனரமைக்கப்பட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நேற்று உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. அத்துடன் மா நகர சபைக்கு உரித்தான இரண்டு மாடிக் கட்டடமும் நேற்றைய தினம் பிரதமரால் திறந்து வைக்கப்பட்டது. கொழும்பு மாநகர சபையினால் 150 மில்லியன் ரூபா செலவில் இந்த அபிவிருத்தித் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமைச்சர் ரவி கருணாநாயக்க, நிமல் சிறிபால டி சில்வா, இரான் விக்ரமரத்ன, சாகல ரத்நாயக்க, சம்பிக்க ரணவக்க உட்பட அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள் கொழும்பு மாநகர மேயர் ஏ. ஜே. எம். முஸம்மில், பிரதி மேயர் டைட்டஸ் பெரேரா உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
தொற்சங்கக் கட்டடம், மாநகர சபையின் அச்சகம் உட்பட பல பிரிவுகள் மேற்படி கட்டடத் தில் உள்ளடங்குவதுடன் அவற்றை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்த பிரதமர், அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட நிகழ்வில் உரையாற்றினார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர்,
குற்றம் செய்தவர்களுக்கு வழக்குத் தொடர்வது என்றும் சிவில் சட்டம் அல்லது இராணுவ சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர்வது என்ற நிலை அன்று இருந்தது.
அப்போது இருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும், அமெரிக்கா போன்ற நாடுகளுடனான நெருக்கடியும் நாடு சர்வதேச யுத்த நீதிமன்றத்தை எதிர்கொள்ள நேரிடும் என்ற நிலையே சகலரிடமும் இருந்தது.
அப்போதே நாம் ஒரு பொறிமுறையை ஏற்படுத்த தவறியதால் அமெரிக்கா போன்ற பல நாடுகள் ஐ. நா. சபையில் இருந்ததால் 2015 ஆம் ஆண்டில் நாடு பொருளாதாரத் தடையையும் சர்வதேச யுத்த நீதிமன்றத்தையும் எதிர்கொள்ள நேரிடும் என்ற பயம் இருந்தது. இது ஜனவரி 8 ஆம் திகதி விலகியது.
யுத்தம் தொடர்பில் நாம் பேசும் போது ஒன்றை நாம் மறந்துவிடக் கூடாது. அதற்கு முழுமையான பொறுப்புக்கூற வேண்டியது புலிகள் அமைப்புதான். பாரிய பொறுப்பை புலிகளும் பிரபாகரனுமே ஏற்க வேண்டும்.
எனினும் பிரபாகரனோ அவரோடு இணைந்து செயற்பட்ட பெரும்பாலானோர் இப்போது உயிருடனில்லை. அவர்கள் உயிரோடிருந்திருந்தால் அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர முடியும்.
இதனால் ஒரு தரப்பினருக்கு எதிராக மட்டும் வழக்குத் தொடருவதால் நாட்டில் தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்ப முடியுமா என்பதும் எம் முன் உள்ள கேள்வியாகும்.
நீதிமன்றத்திற்கிணங்கவே செயற்பட வேண்டியுள்ளது. தேவையானபோது வழக்குத் தொடர வேண்டும். எனினும் எந்தத் தரப்புக்கு எதிராக வழக்குத் தொடருவது என்பதும் கேள்வியே.
தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவதானால் நல்லிணக்கம் அவசியம். இதற்கு சகலரையும் பற்றிய உண்மையை தெரிந்துகொள்வது முக்கியமாகிறது. உண்மையைத் தெரிந்து கொண்ட பின் முடியுமானளவு ஒன்றிணைந்து நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
இதை வழக்குத் தொடருவதன் மூலம் மேற்கொள்ள முடியாது. அவ்வாறானால் அது சாத்தியமற்றுப் போகும். உண்மையைத் தெரிந்து கொள்ளும் பொறிமுறை இதற்கு அவசியமாகிறது. இதற்கென நாம் மூன்று நிறுவனங்களை ஏற்படுத்தியுள்ளோம்.
முதலாவது காணாமற் போனோர் தொடர்பான அலுவலகம், இரண்டாவது குற்றச்சாட்டு சம்பந்தமாகவும் நடந்த சம்பவங்கள் தொடர்பாகவும் விசாரணை நடத்தி அந்த விசாரணையை முன்னெடுத்துச் செல்வதா என்பதைத் தீர்மானிக்கும் சட்ட அலுவலகம் இவையிரண்டும் இலங்கையரின் தலைமையில் இலங்கைக்கேற்ப நாம் நடைமுறைப்படுத்துவோம்.
விசேட சட்ட நிபுணர்கள் இதுபற்றி ஆராய்ந்து உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிப்பர். அந்த ஆணைக்குழு உண்மையைக் கண்டறிந்த பின் எமது அடிப்படை விடயம் நிறைவு பெறும்.
இந்த உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்க மதத் தலைவர்களைக் கொண்ட சபை நியமிக்கப்படும். கருணையை அடிப்படையாகக் கொண்ட ஒரு தீர்வை நாம் எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பது தொடர்பில் அச்சபை செயற்படும். உலகில் உண்மையைக் கண்டறியும் குழு இருந்த போதும் மதத் தலைவர்களைத் தலைமையாகக் கொண்ட கருணையை முன்னிறுத்திய குழு இருந்ததில்லை.
கலிங்க யுத்தத்துக்குப் பின் தீர்மானம் எடுக்கப்பட்டது தமது அரசாட்சி புத்த மதத்துக்கு ஏற்றதாக அமைய வேண்டும் என அதனை முன்னுதாரணமாகக் கொண்டதே இந்த மதத் தலைவர்கள் சபை.
உண்மை நல்லிணக்கம் ஆகியவற்றுக்கே நாம் முன்னுரிமையளிக்க வேண்டும்.
வழக்குகள் தொடரப்பட நேர்ந்தாலும் எமக்கு தேசிய நீதிமன்ற பொறிமுறை உள்ளது. இவையனைத்துமே எமது சட்டம் மூலம் நிறைவேற்றப்பட வேண்டும். பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்.
பொதுநலவாய நாடுகள் உட்பட சர்வதேச நீதிபதிகள் இதில் ஒத்துழைக்க முடியும். எனினும் அனைத்து விசாரணைகளும் இலங்கையின் சட்டப்படியே நடைமுறைப்படுத்தப்படும். பாராளுமன்றமே அதனைத் தீர்மானிக்கும். பாராளுமன்றத்திற்கே அதற்கான முழு அதிகாரமும் உள்ளது.
இதற்கிணங்க இது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு எமது நாட்டின் அரசியலமைப்புக்கிணங்கவே அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
ஒரு போதும் இந்த செயற்பாடுகள் எமது அரசியலமைப்புக்கு முரணாக செயற்படுத்தப்படமாட்டாது. மக்கள் இறையாண்மைக்கு முன்னுரிமையளிக்கப்படும்.
நாம் சர்வதேச ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளோம் எனினும் இலங்கையில் சட்டங்களுக்கு ஏற்பவே அது நடைமுறைப்படுத்தப்படும். இதன் மூலம் மக்கள் இறையாண்மைக்குக் கிடைத்த வெற்றி. இரு பிரதான கட்சிகளும் இணைந்து செயற்பட்டதாலேயே இதனை ஏற்படுத்த முடிந்தது. இதனால் அனைத்துக் கட்சிகளுக்கும் நான் நன்றி கூறக்கடமைப்பட்டுள்ளேன்.
இதனால் இதில் எந்த இன, மத, மக்களும் பயப்பட வேண்டிய அவசியம் கிடையாது. நியாயமான நல்லிணக்கத்துடனானதை நாம் நிறைவேற்ற வேண்டும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.