வாய்ப்பை தவறவிட வேண்டாம்
அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதுடன், நிலைத்திருக்கக் கூடிய சமாதானத்தை ஏற்படுத்துவதற்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கையை வலி யுறுத்தியுள்ளார்.
ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க் சென்றி ருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்தபோது பான் கீ மூன் இதனை வலியுறுத்தியதாக அவருடைய அலுவலகம் தெரிவித்துள்ளது. இலங்கையின் அண்மைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடியிருந்த ஐ.நா செயலாளர் நாயகம், நடைபெற்று முடிந்த தேர்தல், தேசிய ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் நல்லாட்சி தொடர்பில் ஜனாதிபதியின்.
அண்மைய கருத்துக்களையும் பாராட்டியிருந்தார். இச்சந்திப்பு தொடர் பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான அண்மைய அறிக்கையை ஐ.நா செயலாளர் நாயகம் வரவேற்றுள்ளார். இந்த அறிக்கை தொடர்பில் ஐ.நாவுடன் இணைந்து ஆக்கபூர்வமான பங்களிப்பைச் செலுத் துவதற்கும் சாதகமாக நடந்து கொள்வது என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும் பாராட்டியுள்ளார். இந்தப் பரிந்துரைகளை ஜனாதிபதி நடைமுறைப்படுத்துவார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் ஐ.நா செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இலங்கை விடயத்தில் ஐ.நா தொடர்ந்தும் உதவி வழங்குவதுடன், அர்ப்பணிப்புடன் செயற்படத் தயாராக உள்ளது என்ற செய்தியையும் பான் கீ மூன் இச்சந்திப்பில் வெளியிட்டிருந்தார். இக்கட்டான சூழ்நிலையில் ஜனாதிபதி, அரசாங்கம் மற்றும் உள்ளூர் பங்குதாரர்களுடன் நெருக்கமாக செயற்படத் தயாராக இருப்பதாகவும் பான் கீ மூன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பில் கூறியிருந்தார்.