இலங்கை அரசாங்கம் செப்டெம்பர் 21 முதல் 27ஆம் திகதி வரை சமுத்திர மற்றும் கடல்சார் வாரமாக பிரகடனப்படுத்தியுள்ளது. இவ்வாரத்தின் அங்குரார்ப்பணத்தை குறிக்குமுகமாக ஒரு நினைவுச் சின்னம் ஜனாதிபதி மைத்ரிபல சிறிசேன அவர்களுக்கு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து இன்று (21) கையளிக்கப்பட்டது.
இந்த நினைவுச் சின்னம் சமுத்திர மற்றும் கடல்சார் வார நிகழ்ச்சித்திட்டத்தின் தலைவரும் துறைமுகங்கள், விமானப் போக்குவரத்து சிரேஷ;ட ஆலோசகர் திரு.ரொஹான் மாசகோரலவினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. இக்கருப்பொருளின்கீழ் இலங்கையில் நடாத்தப்படும் முதலாவது நிகழ்ச்சித்திட்டம் இதுவாகும்.
இந்த சமுத்திர மற்றும் கடல்சார் வாரம் சர்வதேச கடல்சார் நிறுவனத்தின் ஆலோசனை மற்றும் நிபந்தனைகளுக்கு ஏற்ப நடைபெறுவதுடன், சமுத்திர மற்றும் கடல்சார் அலுவல்கள் கொள்கைகளுடன் தொடர்பான பிரச்சினைகள், சமுத்திர சட்டங்கள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளுடன் தொடர்புடைய விடயங்கள் இவ்வாரத்தில் கலந்துரையாட திட்டமிடப்பட்டுள்ளது.
துறைமுகம் மற்றும் கடல்சார் துறையில் உள்ள கல்விமான்கள், தொழின்மையாளர்கள், தொழில் முயற்சியாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இத்துறையில் உள்ள ஏனைய சர்வதேச பங்காளர்களுடன் நெருக்கமான உறவை கட்டியெழுப்ப உள்ளதோடு, கல்விக் கருத்தரங்குகள், உரைகள் போன்றன உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் இந்த நிகழ்ச்சியுடன் இணைந்ததாக நடைபெற உள்ளன.
அமைச்சர் அர்ஜீன ரணதுங்க, அமைச்சின் செயலாளர் எல்.பீ.ஜயம்பதி, துறைமுகங்கள் அதிகார சபையின் மேலதிக செயலாளரும் பதில் தலைவருமான திருமதி காந்தி பெரேரா உள்ளிட்ட பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.