இறுதிக் கட்ட யுத்தத்தின்போது இறந்தவர்கள் குறித்து ஐ.நா. குழுவின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள எண்ணிகையை, காணாமல் போனோர் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம நிராகரித்துள்ளார்.
2011 இல் ஐ.நா. செயலாளர் பங்கி மூனினால் நியமிக்கப்பட்ட குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கையில், விடுதலைப் புலிகளுடனான இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 40,000 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்திய ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவித்த ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி, ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளின் அடிப்படையில், இறந்தோரின் எண்ணிக்கையை குறிப்பிட்டு சொல்லக் கூடியதாக இல்லாவிட்டாலும், ஐ.நா. அறிக்கையில் உள்ளது போன்று நிச்சயமாக 40,000 ஆக இருக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த அறிக்கையின் கணிப்பீடு மட்டான அடிப்படையிலேயே கூறப்பட்டுள்ளது. அதாவது, 'இறுதி யுத்தத்தின் போது 40,000 பேர் கொல்லப்பட்டிருக்கலாம்' என்றே அறிக்கையிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, காணாமல் போனோர் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு, வடக்கு மற்றும் கிழக்கில் நடாத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், தனது இரண்டாவது இடைக்கால அறிக்கையை தயார் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் குறித்த இடைக்கால அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டு, ஐ.நாவின் மனித உரிமை ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.