கொழும்பு வெலிக்கடை, மகசீன் மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உரிமைகள் மறுக்கப்படுவது, பாரபட்சமாக நடத்தப்படுவது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதியமைச்சுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக இடதுசாரி முன்னணியின் காணாமல் போனோர் அமைப்பின் ஏற்பாட்டாளர் ஜனகன் தெரிவித்தார்.
தமிழ் அரசியல் கைதிகளுக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகளுக்கு எதிராக ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை அனுப்பியதாகவும் அதனடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் ஜபிசி தமிழ் செய்திகளுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை கூறினார்.
சுமார் 239 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் பற்றாக்குறையாக உள்ளது என்றும் கூறிய அவர் கைதிகளுக்குரிய உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை கொழும்பு வெலிக்கடை, மகசீன் அநுராதபுரம் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் பலருக்கு எதிராக பல ஆண்டுகளுக்கும் மேலாக வழக்குத் தாக்கல் செய் யப்படவில்லை என்றும் வேறு பலருடைய வழக்குகள் நீண்டகாலமாக விசாரணைக்கு எடுக்கப்படாமல் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
ஜனவரி எட்டாம் திகதி ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளுக்கும் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தலைமையிலான இடதுசாரி முன்னணி உட்பட பல கட்சிகள் வலியுறுத்தியிருந்தன.
தமிழ் அரசியல் கைதிகளுக்கும் முன்னாள் போராளிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.