23112024Sat
Last update:Wed, 20 Nov 2024

மலையக சமூகத்துக்கு நான் நன்மை செய்ய முற்பட்டதும் எதிரணி அரசியல்வாதிகள் அதனைச் சீர்குலைத்தனர்

19426“மலையகத் தோட்டங்களில் எமது மக்களுக்கு நன்மை தரும் பல்வேறு திட்டங்களை நான் செயற்படுத்த முற்பட்ட போது மலையக எதிரணி அரசியல்வாதிகள் அதனைச் சீர்குலைத்து விட்டனர். ஐந்து பாடசாலைகளை தேசிய கல்லூரிகளாக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்த போது அதனையும் தடுத்து விட்டார்கள்”

 இவ்வாறு அமைச்சரும் வேட்பாளருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார். தோட்ட சேவையாளர் கூட்டுறவுச் சங்கம் ஹற்றன் ஸ்ரீ சாரதாமஹால் மண்டபத்தில் கடந்த ஞாயிறன்று ஏற்பாடு செய்த கூட்டத்தில் திகாம்பரம் உரையாற்றினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் தோட்ட சேவையாளர்களுக்கு வீடு கட்டுவதற்கான காணிக் கோரிக்கை சாதகமாகப் பரிசீலிக்கப்படும். ஐக்கிய தேசிய முன்னணியின் தற்போதைய ஆட்சியின் நூறுநாள் வேலைத் திட்டத்தில் 400 வீடுகளைக் கட்டி முடித்துள்ளேன். இதேபோன்று உங்களுடைய கோரிக்கையையும் செயல்படுத்த ஆவன செய்வேன். இதனைச் செய்ய அரசியல் அதிகாரம் வேண்டும். எனவே தோட்ட சேவையாளர்கள் எமக்கு ஆதரவளித்து மீண்டும் எம்மைத் தெரிவு செய்ய வேண்டும்.

நான் பல நல்ல திட்டங்களை எமது சமூகத்திற்காக செயல்படுத்த முனைந்த போது எதிரணி மலையக அரசியல்வாதிகள் அதனை சீர்குலைத்தனர். ஐந்து பாடசாலைகளை தேசியப் பாடசாலைகளாக்க ஜனாதிபதியிடம் கேட்டேன். அதனைத் தடுத்தார்கள். அவர்கள் மாடிவீடுதான் என்றார்கள். நான் 7 பேர்ச்சஸ் நிலத்துடன் தனித்தனி வீடு கட்ட வழி சமைத்தேன். நான் வீரவசனம் பேசவில்லை. சொல்வதைச் செய்வேன். செய்வதைச் சொல்வேன்.

மேற்படி கூட்டத்தில் உரையாற்றிய கல்வி இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன் பேசுகையில், தோட்ட சேவையாளரின் காணிக் கோரிக்கை மனிதாபிமானத்துடன் நோக்கப்பட வேண்டும். இன்று மலையகத்தின் கல்வி ஓரளவு வளர்ச்சி கண்டுள்ளது. முன்னர் வடக்கு, கிழக்கு மாகாண ஆசிரியர்கள் இருந்த இடத்தில் இன்று எமது பிரதேச ஆசிரியர்கள் கற்பிக்கிறார்கள். முன்னர் வடக்கு, கிழக்கு மாகாணத்தவர்கள் தோட்ட உத்தியோகத்தராக இருந்தார்கள். இன்று நம்மவர்கள் அதைச் செய்கிறார்கள். இப்படியான நிலையில் இவர்களுக்கும் காணி, வீடு கட்டாயம் தேவை.

நான் கல்வி இராஜாங்க அமைச்சராகி பல சேவைகளை செய்துள்ளேன். 25 பாடசாலைகளை தரமுயர்த்தியுள்ளோம். கட்டபுளா, கொலபத்தனை தோட்டத்தில் பல்கலைக்கழக கல்லூரி ஒன்றை அமைக்க 5 ஏக்கர் காணியை வாங்கியுள்ளோம். இதேபோல் ஆசிரிய நியமனங்களைச் செய்துள்ளோம். எனவே உங்களை மீண்டும் தெரிவு செய்யும் பட்சத்தில் தோட்ட சேவையாளரின் காணிக் கோரிக்கைக்கும் ஆவன செய்வோம்” என்றார்.

தமிழ் முற்போக்கு முன்னணியின் சார்பில் ஐ.தே.க.வின் யானைச் சின்னத்தில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் மற்றொரு வேட்பாளரான எம். திலகராஜ் உரையாற்றுகையில், நாம் அரசியல் அதிகாரத்திற்காகக் குரல் கொடுக்க எங்களை தெரிவு செய்யும்படி தோட்ட சேவையாளர்களாகிய உங்களை கேட்டுக் கொள்கிறேன். அப்பொழுதுதான் உங்கள் காணிக் கோரிக்கையை செயல்படுத்த முடியும் என்றார். தோட்ட சே¨வாயளர் கூட்டுறவு சங்க அகில இலங்கை உப தலைவர் செல்லத்துரை மனோகரன் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். மற்றும் பலர் உரையாற்றினர்.