வர்த்தக சமூகத்தினார் தங்களது தொழில் முயற்சிகளில் அரசியல்வாதிகளின் தலையீடுகளின்றி சுதந்திரமாகச் செயற்படக்கூடிய ஒரு சூழலை அரசாங்கம் உருவாக்கும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று (05) கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற பொருளாதார உச்சிமாநாடு 2015 இறுதிநாள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இலங்கை வர்த்தக சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த உச்சி மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, தற்போதைய அரசாங்கம் உயர்மட்ட வர்த்தகர்கள் முதல் நடைபாதை ரம்புட்டான் வியாபாரிகள் வரை அரசியல் செல்வாக்கிற்கு அடிபணிந்திருந்த யுகத்திற்கு முடிவுகட்டியிருப்பதாகத் தெரிவித்தார்;.
வர்த்தக நடவடிக்கைகளில் தலையிடுவது அரசியல்வாதிகளுக்கு பொருத்தமானதல்ல எனத் தெரிவித்த ஜனாதிபதி, அரச மற்றும் தனியார்த்துறையினர் சுதந்திரமாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் செயற்படுவதற்கான சூழலை அரசாங்கம் உருவாக்கும் எனவும் தெரிவித்தார்.
தொழிற்துறையினருக்கு மட்டுமன்றி நீதித்துறையிலுள்ளவர்கள், அரச அலுவலர்கள், பொலிஸார் தங்களது கடமைகளைச் சுதந்திரமாக நிறைவேற்றக்கூடிய சூழலை ஏற்படுத்துவதோடு, நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக வாழக்கூடிய சுதந்திரமான சூழலை தற்போதைய அரசாங்கம் உறுதிப்படுத்தும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கடந்த ஜனவரி 08 ஆம் திகதி நாட்டுமக்கள் வரலாற்றில் அதிக வாக்குகளால் தம்மை இந்த நாட்டின் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்து தம்மீது வைத்திருக்கும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டியது தனது பொறுப்பாகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, அந்தப் பயணத்தைப் பலப்படுத்துவதற்குப் பொருத்தமான ஒரு அரசாங்கம் இன்னும் இரண்டு வாரங்களில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் அமைக்கப்படும் என தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கத்தின் நடுநிலையான வெளிநாட்டுக் கொள்ககையின் காரணமாக பல வெளிநாடுகளின் உதவிகள் இலங்கைக்குக் கிடைத்துவருவதாகவும் அந்த நாடுகளுடனான உடன்படிக்கைகளினூடாக சர்வதேச சந்தையில் இலங்கைக்கு விரிவான சந்தர்ப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, அதிலிருந்து வர்த்தக தொழில் முயற்சியாளர்கள் முழுமையான நன்மைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அரச மற்றும் தனியார்த்துறையைச் சேர்ந்த பங்காளர்கள் நாட்டின் ஏற்றுமதியின் வளர்ச்சியை உறுதிசெய்ய பங்களிப்புச் செய்ய வேண்டும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, அரசாங்கத்துறை அதன் வினைத்திறனையும் உற்பத்தித்திறனையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்;.
எல்லா நாடுகளும் இலங்கையுடன் நட்புறவுடன் செயற்படும்வகையிலான ஒரு வெளிநாட்டுக் கொள்கையை அரசாங்கம் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இலங்கை அதன் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்கக்கூடிய வகையில் பாரம்பரிய ஏற்றுமதிக்குப் பகரமாக புதிய கண்டுபிடிப்புகளைச் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
16 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை வர்த்தக உச்சி மாநாடு இலங்கை வர்த்தக சங்கத்தின் ஒரு முக்கிய நிகழ்வு என்பதோடு, பொருளாதாரத் துறையில் முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதை அது நோக்கமாகக் கொண்டுள்ளது. “50பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஏற்றுமதியை நோக்கி” என்பது இவ்வருட உச்சி மாநாட்டின் கருப்பொருளாகும்.
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, இலங்கை வர்த்தக சங்கத்தின் தலைவர் சமந்த ரணதுங்க, உபதலைவர் ராஜேந்திரா தியாகராஜா ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.