23112024Sat
Last update:Wed, 20 Nov 2024

ஐரோப்பிய ஒன்றியம் தேர்தல் கண்காணிப்பில் சுயாதீனமாகவே செயற்படும்

கண்காணிப்புக் குழுவின் தலைவர் கிறிஸ்டின்

EU Election Observersஅரசியல் செயற்பாட்டாளர்களாகவின்றி சுயாதீன தேர்தல் கண்காணிப்பாளர்களாக இலங்கையின் தேர்தல் செயற்பாடுகளைக் கண்காணிக்கவிருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்புக் குழுவின் தலைவர் பிரதான கண்காணிப்பாளர் கிறிஸ்டின் டன் பிரெடா தெரிவித்தார் .

பொதுத் தேர்தல்களைக் காணிக்கும் ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்புக் குழுவின் செயற்பாடுகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டன. இது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்றது. இதில் கருத்துத் தெரிவிக்கும்போதே ஐரோப்பிய தேர்தல் கண்காணிப்புக் குழுவின் தலைவர் பிரெடா இவ்வாறு கூறினார்.

தேர்தல்கள் திணைக்களத்தின் அழைப்பையேற்று நாம் இங்கு வந்துள்ளோம். ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் 17 நாடுகளைச் சேர்ந்த 70 கண்காணிப்பாளர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். இதில் 8 துறைசார் நிபுணர்களும், 18 நீண்டகால கண்காணிப்பாளர்களும், 28 குறுகியகால கண்காணிப்பாளர்களும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் தமது கண்காணிப்புக் குழுவுக்கும் இடையில் எதுவித தொடர்பும் இல்லையெனக் குறிப்பிட்ட அவர், சுயாதீன தேர்தல் கண்காணிப்பாளர்களாக தாம் இலங்கை வந்திருப்பதாகவும் கூறினார். தமது குழுவில் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்கள் 6 பேரும் அங்கம் வகிக்கின்றனர்.

பக்கச்சார்பின்றி நடுநிலையாக செயற்படுவது என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு விதிகளை அடிப்படையாகக் கொண்டு, இலங்கையின் சட்ட கட்டமைப்பு மற்றும் அதனை நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகள், தேர்தல் செயற்பாடுகள் போன்றவற்றை கண்காணிக்கவிருப்பதாக அவர் கூறினார்.

ஜூலை 19ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 28ஆம் திகதிவரை ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழுவின் செயற்பாடு காணப்படும். உலகத்தில் நடுநிலையான தேர்தல் கண்காணிப்பாளர்கள் என்ற பெயர் பெற்றிருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்புக் குழு 10 ஆண்டுகளின் பின்னர் இலங்கை யில் தேர்தல் செயற்பாடுகளைக் கண்காணிக்கவிருப்பதாகவும் பிரெடா சுட்டிக்காட்டினார்.

இன்றையதினம் யாழ்ப்பாணத்துக்குச் சென்று அங்குள்ள தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆராயவிருப்பதுடன், நாட்டின் ஏனைய பகுதிகளுக்குச் சென்று அரசியல் கட்சிகள், தேர்தல் திணைக்கள அதிகாரிகள், வேட்பாளர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் உள்ளூர் வாசிகள் என பலதரப்பட்டவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடவிருப்பதாகவும் அவர் கூறினார்.

தேர்தல் செயற்பாடுகள், பிரசாரங்கள் என்பவற்றைத் தமது குழு கண்காணிக்கும் அதேநேரம், முக்கிய பிரசார தளமான ஊடகங்களையும் கண்காணிக்கவிருப்பதாகக் கூறினார். தொலைக்காட்சிகள், வானொலிகள் மற்றும் பத்திரிகைகளைக் கண்காணிக்கும் அதேநேரம், செய்தி இணையத்தளங்களையும் கண்காணிக்கவிருப்பதாகக் கூறினார்.

தாம் அரசியல்வாதியாக இருந்தாலும் அரசியல் செயற்பாட்டாளராகவன்றி சுயாதீன தேர்தல் கண்காணிப்பாளராக இலங்கை வந்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கு அதிகாரிகள் மற்றும் சிவில் பிரதிநிதிகள் எடுக்கும் முயற்சிகளுக்கு தமது பிரசன்னம் உறுதுணையாக இருக்கும் என நம்புவதாகவும் கூறினார்.

வன்முறைகள் அற்ற நீதியான தேர்தலை நடத்துவதற்கான சூழல் காணப்படும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தேர்தல் முடிவடைந்து 48 மணித்தியா லத்துக்குள் தமது குழுவின் முதலாவது பகிரங்க அறிக்கை வெளியிடப்படும் எனவும், அதன் பின்னர் மூன்று மாதங் களுக்குள் இலங்கையின் பொதுத் தேர்தல் தொடர்பான ஆய்வறிக்கை வெளியிடப் படும் என்றும் கூறினார். இதில் தேர்தல் தொடர்பான ஆலோசனைகளும் முன்மொழியப்பட்டிருக்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.