அலரி மாளிகையில் நேற்று ஒப்பந்தம் கைச்சாத்து
ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் யானை சின்னத்தில் போட்டியிடுவதற்காக நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி என்னும் விரிவான அரசியல் கூட்டமைப்பொன்று நேற்று ஸ்தாபிக்கப்பட்டது.
இதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை நேற்றுக்காலை அலரிமாளிகையில் கைச்சாத்திடப்பட்டது.
இந்த நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியில் ஐக்கிய தேசியக் கட்சி, ஜாதிக்க ஹெல உருமய, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவினர் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் அகியன அங்கம் வகிக்கின்றன.
இதேவேளை ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ள முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி மேலும் பல அரசியல் கட்சிகள் ஆகியன இந்த முன்னணிக்கான தமது ஆதரவினை வழங்கியுள்ளன.
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியை அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கும் அதற்கென தனியானதொரு சின்னத்தை உருவாக்கவும் கால அவகாசம் இல்லாததால் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட அனைவரும் ஒன்றிணைந்து ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் யானை சின்னத்தில் போட்டியிடுவரென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
எனினும் இந்த யானை சின்னம் தற்காலிகமானது எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார். தேர்தலில் களமி றங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ராஜபக்ஷ ஆட்சியாளர்களின் சவால்களுக்கு முகம்கொடுப்பதற்கும் நல்லாட்சிக்கான கொள்கைகளை நடைமுறைப்படுத்தக்கூடிய விதத்திலான 2/3 பெரும்பான்மையை பாராளுமன்றத்தில் பெறும் நோக்கங்களுக்காகவே தேசியக் கட்சி எதிர்வரும் தேர்தலில் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து போட்டியிட இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
‘யானை’ சின்னத்தின் கீழ் போட்டியிடு பவர்கள் இந்த முன்னணியைச் சேர்ந்த எந்தவொரு கட்சியினதும் தனித்துவம் இழக்கப்பட மாட்டாதென சுட்டிக்காட்டிய பிரதமர், கட்சிகளின் தனித்துவங்களை பாதுகாப்பதற்காக தலைமைத்துவ சபையொன்று உருவாக்கப்படுமெனவும் கூறினார். அதேநேரம் தேர்தலுக்குப் பின்னர் பாராளுமன்றத்தில் இவர்கள் தனித்தனிக் குழுக்களாக செயற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தேர்தல் முடிவடைந்ததும் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியை ஓர் அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கும் அதற்கென தனியானதொரு சின்னத்தை வழங்குவது தொடர்பிலும் ஏற்கனவே அனைத்து கட்சிகளுடனும் கலந்துரையாடி யிருப்பதாகவும் பிரதமர் இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க, ஐக்கிய தேசியக் கட்சிக்கும்
எமது கட்சிக்குமிடையே கொள்கை யளவில் வேறுபாடுகள் இருந்த போதும் குடும்ப ஆட்சி மீண்டும் நாட்டில் உருவாகக் கூடாது என்பதற்காக அதனை தோற்கடிக்கும் ஒரே நோக்கிற்காக நாம் ஒன்று சேர்ந்து பலம் பொருந்தியதொரு கூட்டணியை உருவாக்கியுள்ளோமெனத் தெரிவித்தார்.
அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, உதயமாகியுள்ள முன்னணிக்கென தனியானதொரு சின்னத்தை உருவாக்க போதிய கால அவகாசம் கிடைக்காமல் போனதால் தேர்தலுக்குப் பின்னர் தனியானதொரு சின்னம் வழங்கப்படு மெனவும் கூறினார்.
பாராளுமன்றத் தேர்தலில் போட்டி யிடுவதற்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், இராதா கிருஷ்ணன், திகாம்பரம் ஆகியோர் தலைமையிலான தமிழர் முற்போக்கு முன்னணி மற்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஏற்கனவே ஒப்பந்தங்கள் கைச்சத்திட்டுள்ளன.
கடந்த சனிக்கிழமை கொழும்பு கெம்பல் பார்க் மைதானத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டின் போதும் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியொன்று உருவாகுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத் தக்கது.