* தோல்வி கண்ட ஒருவர் அரசியலில் ஒதுங்கியிருக்க வேண்டும்
* பதவிக்காக மஹிந்த மீண்டும் இனவாதத்தை பயன்படுத்துவார்
* சுதந்திரக் கட்சியிலும் இவருக்கு இடம் கிடையாது
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எப்படி வந்தாலும் அவர் தோல்வியடைவது உறுதி. இறுதித் தோல்வியை அவருக்கு தெரியப்படுத்த காத்திருக்கிறோமென கட்சிகளின் தலைவர்களும், அமைச்சர்களும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
மஹிந்த ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அவர்கள், மஹிந்த பதவி ஆசை பிடித்தே செயற்ப டுகிறார். அப்படியானால் அவர் நல்லவர் என்பதை நிரூபிக்க வேண்டும்.
இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவர் பதிலளிக்க வேண்டும். அதன்பின்பே அவர் தேர்தலில் களமிறங்க வேண்டும்.
ஊழல் மோசடியில் சிக்கியுள்ள சிலரே மஹிந்தவை தூக்கிப் பிடித்துத் திரிகின்றனர் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மக்கள் ஆணையைப் பற்றிப் பேசும் உரிமை மஹிந்தவுக்குக் கிடையாது.
மக்கள் கடந்த தேர்தலில் வழங்கிய ஆணையை புரிந்து கொண்டு மஹிந்த செயற்பட வேண்டும். இதன்படி, அவர் அரசியலில் இருந்து ஒதுங்குவதுதான் மக்களுக்குச் செய்யும் நன்மையாகுமெனவும் கட்சித் தலைவர்கள் கூறினர். அவர்கள் மேலும் கூறியதாவது, ஐ.தே.க பேச்சாளரும்
கல்வியமைச்சருமான அகில விராஜ் காரியவசம்
மஹிந்த ராஜபக்ஷவை முடியுமானால் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டி வெற்றியீட்டுக் காட்டுமாறு நாம் சவால் விடுக்கின்றோம்.
இவரது ஆட்சியை எதிர்க்கும் மக்கள் அதற்கான தகுந்த பதிலடியை ஜனவரி 08ஆம் திகதி வழங்கியிருந்தனர். என்ற போதும் கடந்த ஆட்சியில் ஊழல் மோசடியில் ஈடுபட்டிருந்த திருட்டுக் கும்பல் தமக்கெதிரான விசாரணைகளை நிறுத்துவதற்கு அல்லது கைவிடுவதற்கு ஏதுவாக மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவை அரசியலுக்குக் கொண்டுவரப் பார்க்கின்றன.
நூறு நாள் வேலைத் திட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி மக்களுக்கு அதிகளவிலான நிவாரணத்தை வழங்கியுள்ளது. பொருளாதாரத்தில் பாரிய புரட்சியை ஏற்படுத்துவதற்கும் 10 இலட்சம் வேலை வாய்ப்பினை வழங்குவதற்கும் ஊழல் மோசடியாளர் களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும் பல்வேறு வேலைத் திட்டங்கள் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
எனவே மஹிந்த ராஜபக்ஷ எப்படி வந்தாலும் அவர் தோல்வியடைவது உறுதி. அவரது இறுதித் தோல்வியை நாம் அவருக்குத் தெரியப்படுத்த ஆவலுடன் காத்திருக்கின்றோம். கடந்த முறை அவருக்குக் கிடைத்த 58 இலட்சம் வாக்குகளில் அரைவாசியினைக் கூட இம்முறை அவருக்குக் கிடைக்க நாம் இடம்விடமாட்டோம். முடிமானால் அவர் ஐ. தே. க. வுடன் மோதிப் பார்க்கட்டும்.
அமைச்சர் நவீன் திசாநாயக்க
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பெயரை மக்கள் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டார்கள் என்ற வரலாறு ஏற்படப் போவதாக விளையாட்டுத்துறை மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க விமர்சித்துள்ளார்.
மக்கள் ஆணையை ஏற்று நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதாக மஹிந்த ராஜபக்ஷ மெதமுலனயில் அறிவித்த நிலையிலேயே அவர் இந்த விமர்சனத்தை முன்வைத் துள்ளார். “மஹிந்த தனது பழைமையான சகாக்களையே வைத்துள்ளார். பழைய டேப்பை போட்டுள்ளார்.
இதில் எதுவும் புதிது அல்ல மக்கள் உங்களை குப்பைத் தொட்டியில் போட்டதாக வரலாறு ஏற்பட போகிறது. இவ்வாறான நடவடிக்கையின் மூலம் மஹிந்த வீழ்ச்சியுறுவதைப் பார்க்கும் பொது கவலையாக உள்ளது” என நவீன் திசாநாயக்க தனது சமூக வலைத்தளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.
தமிழ்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன்
தேர்தலில் போட்டியிடுவதென்பது ஜனநாயக உரிமை. மஹிந்தராஜபக்ஷ ஏற்கனவே ஜனாதிபதியாகவிருந்து மக்களால் தோற்கடிக்கப்பட்டார். இவருடைய ஆட்சிக் காலத்தை மக்கள் வெறுத்தனர். அக்காலப்பகுதியில் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு ள்ளன.மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி, மகள், சகோதரர்கள் விசாரணைக் குட்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்த விசாரணைகள் மிகவும் பாரதூரமான இலஞ்ச இலஞ்ச, ஊழல் சம்பவங்கள் இடம் பெற்றிருப்பதனை மக்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளன.
இந்நிலையில் இனவாத சக்திகளின் ஆதரவுடன் இவர் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக வந்து தமது ஊழல், குற்றச்சாட்டுக்களை மூடி மறைப்பது கெட்டித்தனமல்ல.
அவர் ஏற்கனவே இரண்டு தடவைகள் ஜனாதிபதியாகவும் நீண்ட காலம் பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். அவருக்கு தொடர்ந்தும் பதவி ஆசை இருக்குமானால் இத் தேர்தலில் போட்டி போடுவதற்கு முன்பாக தான் ‘நல்லவர்’ என்பதை நிரூபிக்க வேண்டும். இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக மக்களுக்கு பதிலளிக்க வேண்டும். அதன்பின்னர் தேர்தலில் களமிறங்குவதே அவருக்குப் பொருத்தமாக இருக்கும் என்பதனால் அதுவரையில் அவர்தேர்தலில் ஒதுங்கியிருப்பதே சிறந்தது.
மலையக மக்கள் முன்னணியின் அரசியல் துறைத் தலைவர் இராதா கிருஷ்ணன்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனநாயக ரீதியாக நிராகரிக்கப் பட்டவர். ஜனநாயத்தை விரும்பும் எந்தவொரு மக்களும் இவரை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
மிகுந்த நேர்மையும் கண்ணியமும் நிறைந்த ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயற்பாடுகள் பாரிய அசெளகரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மஜிந்தராஜபக்ஷ, ஏற்கனவே மக்களால் தோற்கடிக்கப்பட்டவர். இவர் மீண்டும் மக்கள் ஆதரவை பெற முனைவது வேடிக்கையாகியுள்ளது. நாட்டு மக்ககளால் நிராகரிக்கப்பட்ட இவரை மீண்டும் தேர்தலில் நிறுத்தி மக்கள் ஆணையைப் பெற்றுக் கொள்ள ஒரு கும்பல் திட்டமிட்டு செயற்படுகின்றது. ஊழல், மோசடியில் சிக்கி விசாரணைகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் தவிக்கும் ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்களே தம்மை காப்பாற்றிக்கொள்வதற்காக மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பாராளுமன்றத்திற்கு அழைத்துவர முயற்சிக்கிறார்கள்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர்நாயகம் வை. எல். எஸ். ஹமீட்
முன்னாள் ஜனாதிபதியாகப் பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ளமை அவர் வகித்த ஜனாதிபதி பதவிக்கு சிறிதும் பெருத்தமில் லாத அதேநேரம் அவரது பதவி ஆசையையும் எடுத்துக் காட்டுகிறது.
மஹிந்த ராஜபக்ஷ தனது ஜனாதிபதி பதவியை தக்க வைத்துக்கொள்வதற்காக இனவாதத்தை தூண்டிவிட்டவர்.கடந்த காலங்களில் அவரால் உருவாக்கப்பட்ட பொதுபல சேனா அமைப்பே நாட்டில் பாரிய இனவாதத்தைத் தூண்டி குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் ஆயுதமாக மஹிந்த ராஜபக்ஷ இனவாதத்தை கையாள்வாரென்பதில் எமக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. அதேபோன்று அவர் பாராளுமன்ற உறுப்பினரானாலும் கூட அதே நிலைதான் தொடரும்.
இது நாட்டின் எதிர்காலம் மற்றும் சக இணக்கப்பாட்டிற்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு பிரச்சினை யாகும். இவர் தனித்துப் போட்டியிடுவாரா யின் இறுதி வரையில் இவர¨¡ல் பெரும்பான் மையினைப் பெறமுடியாது அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலும் இவருக்கு இடம் கிடைகாது என்றே நாம் தொடர்ந்தும் நம்புகின்றோம்.
தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன்
மஹிந்த ராஜபக்ஷ எந்தக் கட்சியில் எந்த ரூபத்தில் வந்தாலும் அவர் சவாலாக அமையமாட்டார். மக்கள் ஆணையைப் பற்றி பேசும் உரிமை அவருக்குக் கிடையாது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் அவருக்கு வழங்கிய ஆணையைப் புரிந்து கொண்டு நடக்க வேண்டும். மக்கள் வழங்கிய ஆணைக்கு அமைய அவர் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.
இவர் ஏற்கனவே இரண்டு தடவைகள் ஜனாதிபதியாகவும் ஒரு தடவை பிரதமராகவும் ஒரு தடவை எதிர்க்கட்சித் தலைவராகவும் நாட்டை ஆட்சி செய்துள்ளார். இவ்வாறு நாட்டை ஆட்சி செய்த அவரை மக்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நிராகரித்து விட்டனர். அதன் பின்னரே ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன மக்களால் தெரிவு செய்யப்பட்டார்.
இவ்வாறான நிலையில் மஹிந்த ராஜபக்ஷ பெருந்தன்மையாக அரசியலிருந்து ஒதுங்கி கொள்வதுடன் புதியவர்களுக்கு இடமளிக்க வேண்டும். இப்படி பதவி வெறி பிடித்து செயற்படக் கூடாது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அவருக்குக் கிடைத்த 52 இலட்சம் வாக்குகளையும் கருத்திற்கொண்டு செயற்படுவதுடன் எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம் திகதி அவருக்கு பாரிய ஏமாற்றம் காத்திருக்கிறது.
விஜித ஹேரத்
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ மக்களால் நிராகரிக்கப்பட்டவர். இவர் மீண்டும் அரசியலில் அதிகாரத்துக்கு வர ஜே. வி.பி. ஒருபோதும் இடமளிக்காது.
மீண்டும் மோசடியாளர்கள் மக்கள் பிரதிநிதிகளாக வருவது தடுக்கப்பட வேண்டும்.மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் மக்களால் நிராகரிக்கப்படுவார்கள்