* ராஜபக்' குடும்பம் யுத்தத்தை விற்றுப் பிழைத்துள்ளது
* யுத்தம் ஆரம்பிக்கும் போதே கோத்தா தரகுக்கூலி பெற்றார்
ராஜபக்ஷ குடும்பத்தினர் யுத்தத்தை விற்று பிழைத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். இதேவேளை, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் 2014 ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கை மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் தோல்வியை பிரதி பலிப்பதாகவே உள்ளது என்றும் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் தோல்வியை பிரதிபலிக்கும் விதமாகவே அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் 2014 ம் ஆண்டுக்கான அறிக்கை வெளியிடப்பட்டி ருக்கிறது.
இதனை புரிந்துகொள்ளாத எதிர்க்கட்சியினர் எம்மீது குற்றஞ் சுமத்தும் தேர்தலுக்கான முன்னோடி நாடகம் அர்த்தமற்றது என்றும் அவர் கூறினார்.
புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்ட போதும் அவர்களின் சர்வதேச வலையமைப்பு மற்றும் நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்ந்தும் இயங்கி வருவதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட் டுள்ளது. ராஜபக்ஷ அரசாங்கத்தில் தீவிரவாதத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் வெற்றியளிக்கவில்லை என்பதனையே இது சுட்டிக் காட்டுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
ராஜபக்ஷ குடும்பத்தினர் யுத்தத்தை விற்று பிழைத்தவர்கள் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ யுத்தத்தை ஆரம்பிக்கும்போதே அதற்கான தரகுக் கூலியை ஒப்பந்தம் செய்து கொண்டார்.
இவர்கள் தொடர்ந்தும் ஆட்சியிலிருந்தி ருந்தால் வடக்கில் ஒன்றல்ல பத்து, பதினைந்து பிரபாகரன்கள் உருவாகியிருப் பார்களெனவும் அமைச்சர் சமரவீர தெரிவித்தார்.
2009 ம் ஆண்டு மே 18ம் திகதியுடன் பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போதும் வடக்கில் வாழும் தமிழர்களின் மனதை வெல்வதற்கு ராஜபக்ஷவினர் தவறி விட்டனர்.
இராணுவ வெற்றியை பயன்படுத்தி தமது குடும்ப பலத்தை 18 வது திருத்தம் மூலம் உறுதி செய்வதுவே இவர்களது முக்கிய குறிக்கோளாக விருந்தது. தமிழ் மக்களுக்காக எந்தவொரு செயற்பாட்டி னையும் இவர்கள் முன்னெடுக்கவில்லை. இதன் காரணமாகவே புலிகள் சார்பான அமைப்புக்கள் வெளிநாட்டு நிகழ்ச்சி நிரல்களுக்கமைய செயற்பட வேண்டி ஏற்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.
அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையானது மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தைக் குறிக்கும் 2014 ம் ஆண்டிற்குரியது. இதுகூட சரியாக தெரியாத எதிர்க்கட்சியினர் எல்.ரீ.ரீ.ஈ. யினர் மீண்டும் உருவாக்க எமது அரசாங்கம் உதவி வருவதாக குற்றம் சுமத்தியுள்ளமை வேடிக்கையாக உள்ளது.
தேர்தல் நெருங்கி வரும் சந்தர்ப்பத்தில் நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாவதை காரணம் காட்டுவதனை தவிர வேறு எந்த உபாயமார்க்கமும் இவர்களிடம் இல்லை. வங்குரோத்து அடைந்திருக்கும் அரசியலை தக்க வைத்துக் கொள்ள எடுக்கும் முயற்சியாகவே இதனை நாம் பார்க்கிறோமென்றும் அமைச்சர் கூறினார்.