22112024Fri
Last update:Wed, 20 Nov 2024

திருத்தங்களுடன் 20 நிறைவேறும்: எவரும் எதிர்பாராத நேரம் பாராளுமன்றம் கலையலாம்

த. மு. கூவிடம் ஜனாதிபதி உறுதி

MANO GANESANதமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்கள் பழனி திகாம்பரம், வி. இராதாகிருஷ்ணன் ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து உரையாடியுள்ளனர். இந்த சந்திப்பு நேற்று பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

 இந்த சந்திப்பு தொடர்பாக கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியதாவது,

எமது சந்திப்பின் போது பல்வேறு விடயங்களை நாம் கலந்துரையாடினோம். ஜனாதிபதி எம்மிடம் கூறிய விடயங்களில் சிலவற்றை கூறமுடியும்.

பாராளுமன்ற கலைப்பு

பிரதமர் 24 ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என கூறியிருக்கலாம். இந்த பாராளுமன்றம் இனியும் தொடர முடியாது.

இது கலைக்கப்பட வேண்டும். அதற்கான முடிவை நான் எடுத்து விட்டேன். திட்டவட்டமான திகதியை நான் இன்னமும் தீர்மானிக்கவில்லை. இன்னமும் சில தினங்களில் திகதி தீர்மானிக்கப்படும். எனினும் எவரும் எதிர்பாரா விரைவில் திடீரென பாராளுமன்றம் கலைக்கப்படும் என்பதை கூறி வைக்க விரும்புகிறேன்.

20ம் திருத்தம்

20 ஆம் திருத்தம் வர்த்தமானி பிரகடனத்துடன் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். 20 ஆம் திருத்த சட்டமூலத்தில் என்னவித உள்ளடக்கம் இருந்தாலும், அவற்றில் அவசியமானவை குழுநிலை விவாதத்தின் போது கொண்டுவரப்படும்.

புதிய திருத்தங்களை உள்வாங்குவதன் மூலம் மேலும் திருத்தி அமைக்கப்படும். இதன் மூலம், நான் ஏற்கனவே வழங்கியுள்ள சிறுபான்மை மக்களுக்கு பாதகமான எதையும் தேர்தல் திருத்தம் என்ற பெயரில் செய்ய இடந்தர மாட்டேன். சிறுபான்மை மக்களுக்கு தொகுதி நிர்ணயம் தொடர்பில் அநீதி ஏற்பட்டு விடக்கூடாது என்ற காரணத்தினாலேயே நான் மொத்த உறுப்பினர் தொகையை 255 ஆக ஆரம்பத்திலேயே அறிவித்து இருந்தேன் என்பதையும் ஜனாதிபதி ஞாபக மூட்டினார்.