பயங்கரவாதமோ, பிரிவினைவாதமோ தலைதூக்க இடமளிக்க போவதில்லை
30 வருடங்களுக்கு முன்பு அரசுகள் செயற்பட்ட செயற்பட்ட விதமே பிரச்சினை உருவாக காரணம்
படையினர் ஞாபகார்த்த விழாவில் ஜனாதிபதி
யுத்தத்தின் பின்னரான செயற்பாடுகள் பெளதீக அபிவிருத்தியை முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளப்பட்டதே தவிர மக்கள் மனங்களை வெற்றிகொள்ளத் தவறிவிட்டன என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். புதிய அரசாங்கமானது அபிவிருத்தி யையும் நல்லிணக்கத்தையும் கொள் கையாகக் கொண்டு செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அரசியல் எதிர் வாதிகளின் தவறான பிரசாரங்களை முற்றாக நிராகரிப்பதாகவும் தெரிவித்தார்.
மீண்டும் இந்த நாட்டில் பயங்கர வாதமோ பிரிவினை வாதமோ தலைதூக்க ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என தெரிவித்த அவர், அதற்கான முழுமையான பொறுப்பைத் தாம் ஏற்றுள்ளதாகவும் உறுதியாகத் தெரிவித்தார். படை வீரர்கள் ஞாபகார்த்த தின நிகழ்வு நேற்று மாத்தறை நகரில் நடைபெற்றது.
இந்த உத்தியோகபூர்வ நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, பிரதம நீதியரசர் ஸ்ரீபவன், முப்படைகளின் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், உள்நாட்டு வெளிநாட்டு இராஜதந்திரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, இந்தப் படையினர் ஞாபகார்த்த நிகழ்வு இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தின் நிகழ்வாகவும் நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தும் நிகழ்வாகவும் முக்கியத்து வப்படுத்தப்பட்டு எதிர்கால நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். புதிய அரசாங்கம் படையினரின் நலன்கள் போன்றே நாட்டு மக்களின் நலன்களுக்கான அனைத்து நடவடிக்கைகளையும் உறுதியாகச் செயற்படுத்தும்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை அனுஷ்டிக்கும் தருணம் இது.
30 வருடங்களாகத் தொடர்ந்த பயங்கரவாதத்திற்கு முடிவுகட்டி நாட்டிற்கு சமாதானத்தை பெற்றுத்தந்த தினத்தை நாம் நினைவு கூருகின்றோம்.
நாட்டின் இறைமை ஆட்புல ஒருமைப் பாட்டைப் பாதுகாத்து மக்களுக்கு அமைதியான நாட்டைப் பெற்றுக்கொண்ட தினம் இது.
பயங்கரவாத மிலேச்சத்தனமான யுத்தத்தின் அனுபவம் நம் அனைவருக்குமே உள்ளது. மனிதாபிமானம் இல்லா தொழிக்கப்பட்டு உண்மை புதைக்கப்பட்டு சமாதானம் சிதைக்கப்பட்ட காலம் அது. பல்லாயிரக்கணக்கான மனித உயிர்கள் இதில் பலியாக் கப்பட்டுள்ளன. எப்போதுமே யுத்தம் இடம்பெற்றால் அங்கு மனிதத் தன்மையை எதிர்பார்க்க முடியாது.
தாய் நாட்டைப் பாதுகாக்கும் வகையில் எமது முப்படை வீரர்கள் தமது உயிர்களைத் தியாகம் செய்து இந்த யுத்தத்தில் ஈடுபட்டனர்.
1980 களின் முற்பகுதியில் ஆரம்பமான இந்த யுத்தம் சில வருடங்களில் நாட்டின் பேரழிவுக்குக் காரணமாகியது. இதனால் எமது அபிவிருத்தி பின்னடைவு கண்டது. எதிர்பார்ப்புகள் சூன்யமாகின. இந்த நிலையிலும் நாட்டு மக்களின் அர்ப்பணிப்பும் முப்படையினரின் அர்ப்பணிப்பும் நாட்டை மீட்டெடுக்கும் பணியில் வெற்றிபெற உறுதுணையாய் அமைந்தது. நாட்டு மக்களின் நன்றியும் கெளரவமும் அவர்களுக்கு உரித்தாகிறது.
அதேபோன்று யுத்தம் ஆரம்பமான 80 காலப்பகுதியிலிருந்து இந்த யுத்த நடவடிக்கைகளுக்கு துணை நின்ற அர்ப்பணிப்புள்ள பங்களிப்பைச் செய்த அரச தலைவர்களுக்கும் நாட்டு மக்களின் கெளரவம் உரித்தாகட்டும்.
படையினரின் அர்ப்பணிப்பும் தியாகமும் விலை மதிக்க முடியாதது. இதற்கு நன்றியாக அரசாங்கமும் முழு நாட்டு மக்களும் முப்படையினருக்கும் கெளரவத்தைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமை கொள்கிறோம். முப்பது வருட காலம் இந்த நாட்டில் யுத்தம் இடம்பெற்றது. இதற்கு இந்த 30 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்ப வங்கள் பல காரணமாகியுள்ளன. அக் காலத்தில் அரசாங்கங்கள் செயற்பட்ட விதம் தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.
1948 இல் பிரித்தானிய ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றுக்கொள்ள இந்த நாட் டின் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் சகோதரத்துவத்துடன் செயற்பட்டுள்ளனர். அன்றுள்ள தலைவர்கள் இதன் போது தமது பொறுப்புக்களை முறையாக நிறைவேற்றியுள்ளனர்.
1948 இல் நாம் பெற்றுக்கொண்ட சுதந்திரம் இந்த நாட்டில் சகல இன, மத மக்களினதும் ஒற்றுமையான செயற்பாட்டின் மூலமே பெற்றுக்கொள்ளப் பட்டது. இதற்கான போராட்டம் வெற்றி கொள்ளப்பட்டது.
அத்தகைய சுதந்திரத்தின் பின்னர் நாட்டில் மக்களிடையே சக வாழ்வு மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் மேற் கொண்ட செயற்பாடுகளில் பல குறை பாடுகள் காணப்பட்டன. இதனால் இனங்களுக்கிடையில் அதிருப்தியான நிலையே தோன்றியது. இதன் பிரதிபலனே இறுதியில் பயங்கரவாத யுத்தத்திற்குக் காரணமாகியது.
2009 மே மாதம் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின் அந்த சமாதான சூழலில் மேற்கொள்ளப்பட்ட செயற் பாடுகள் முறையாக நடைமுறைப் படுத்தப்பட்டனவா என்பது தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.
யுத்தக் காலத்திலும் நாட்டுக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் முறையாக முன்னெடுக்கப்பட்டனவா என்பது பற்றியும் குறிப்பாக ஆராய வேண்டியுள்ளது.
பெளதீக வளங்களின் அபிவிருத்தியின் மூலம் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதில் மேற்கொள்ளப்பட்ட முயற்சி பயனளிக் கவில்லை. நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடங்கள், வீதிகள் என அழிவுற்ற பெளதீக வளங்கள் மீள கட்டியெழுப்பப் பட்டன.
எனினும் மக்கள் மனங்களில் நம்பிக் கையைக் கட்டியெழுப்பும் செயற் பாடுகள் இடம்பெறவில்லை.
இதனைக் கவனத்திற் கொண்டு எமது புதிய அரசாங்கம் சக வாழ்வையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதை கொள்கையாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றது.
அபிவிருத்தியின் மூலம் மட்டும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது. நல்லிணக்கம் தொடர்பில் பேசும்போது உண்மையை நிலைநாட்டுவது, அனைத்து இனங்களுக்கிடையேயும் பயம், சந்தேகம் மற்றும் அவ நம்பிக்கையை இல்லா தொழிப்பது யுத்தத்தினால் அழிவடைந்த வற்றை மீளக் கட்டியெழுப்புவது போன்ற விடயங்களில் நாம் முக்கிய கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
யுத்தத்தின் அனுபவங்களோடு இவற் றுக்கு முக்கியமளித்து முன்னிலைப்படுத் துவதும் முக்கியமாகிறது.
இறுதி யுத்தம் மாவிலாறு தண்ணீர்ப் பிரச்சினை காரணமாகவே ஆரம்பமாகியது. அத்தோடு ஆரம்பித்த யுத்தம், அதற்கான செயற்பாடுகளின் மூலம் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து அமைதியை நிலை நாட்ட முடிந்தது. மாவிலாறு நீர்ப் பிரச்சினையால் உருவான யுத்தம் நந்திக்கடல் நீரில் முடிவுற்றது.
குறிப்பாக மக்களுக்கிடையில் பயம், சந்தேகம் அவநம்பிக்கை களையப்பட்டு அனைவருக்கும் புரிந்துணர்வையும் அந்நியோன்யத்தையும் கட்டியெழுப்புவதில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட்டு வருகின்றது.
தற்போது நாட்டிலுள்ள சவால்களை வெற்றி கொள்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்கையில் அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கம் என்ற விடயங்களில் முக்கிய கவனம் செலுத்துவது அவசிய மாகிறது. அதேபோன்று படையினருக்கு வழங்கும் கெளரவமாக புதிய அரசாங்கம் தேசிய பாதுகாப்புக்கும் படை வீரர்களின் நலன்களுக்கும் மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் முழுமையாக முன்னெடுப்பது உறுதி.
தேசிய பாதுகாப்பு சபையின் ஆலோச னைக்கிணங்க புதிய பாதுகாப்பு வியூக ங்கள் தொடர்பில் நாம் கவனம் செலுத்தி வருகின்றோம். மீண்டும் இந்த நாட்டில் யுத்தம் ஏற்படாது. அதற்கான பொறுப்பை நாம் ஏற்றுள்ளோம். பயங்கரவாதத்திற்கோ பிரிவினை வாதத்திற்கோ இனி ஒருபோதும் இந்த நாட்டில் இடமளிக்க முடியாது.
அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கத்தைப் பலப்படுத்துவது போன்றே முப்படையினர் உட்பட பாதுகாப்புத்துறை தொடர்பில் நாம் முழுமையான நம்பிக்கை வைத்து செயற்படுகிறோம்.
சில வேளைகளில் அரசியலில் எதிர் வாதிகள் எமது அரசாங்கத்தை வித்தியாச மாகவே நோக்குகின்றனர். இந்த அடிப்படை வாதிகளின் செயற்பாடு களையும் கருத்துக்களையும் நாம் தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளோம்.
இனங்களுக்கிடையில் அவநம்பிக் கையை ஏற்படுத்தும் இத்தகைய செயற்பாடுகளில் அடிப்படைவாதிகள் அனைத்துத் துறை களிலும் உள்ளனர்.
இது எமது உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடு களிலும் பார்க்கக்கூடிய விடயமாகும். இந்த படையினர் தின நிகழ்வு இனங்களுக்கிடையில் நல்லி ணக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்வாகவும் நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தும் நிகழ்வாகவும் அரசாங்கத்தின் அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளின் புதிய அத்தியாயத்தைப் புரட்டும் தினமாகவும் படை வீரர்களை கெளர விக்கும் தின மாகவும் அனுஷ்டிக்கப் படுகிறது. எதிர்க ¡லத்திலும் இதேவிதமாக இது முன்னெ டுக்கப்படும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.