ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மீண்டும் வலியுறுத்தல்
தேர்தல் மறுசீரமைப்பு சட்டத்தை நிறைவேற்றி புதிய தேர்தல் முறையின் கீழே அடுத்த தேர்தல் நடத்த வேண்டும் என்ற எமது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் கிடையாது. தேர்தலுக்கு பயப்படுபவர்களே புதிய தேர்தல் முறையின் கீழ் தேர்தல் நடத்தப்படுவதை எதிர்ப்பதாக எதிர்க் கட்சித் தவைர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
புதிய தேர்தல் முறையினால் எவருக்கும் அநீதி ஏற்படாது என்று தெரிவித்த அவர் 20 ஆவது திருத்த சட்டமூலத்தை நிறைவேற்றிய பின்னரே பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது.
இங்கு கருத்துத் தெரிவித்த அவர் தேர்தல் மறுசீரமைப்பு குறித்து ஆரம்ப முதல் நாம் கோரி வருகிறோம். 19 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் கூடுதல் கெளரவம் சுதந்திரக் கட்சியையே சாரும்.
விருப்பு வாக்கற்ற கலப்பு தேர்தல் முறையொன்றை அறிமுகப்படுத்துவதாக மைத்திரிபால சிறிசேன தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதியளித்திருந்தார். புதிய தேர்தல் மறுசீரமைப்பு அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.
புதிய தேர்தல் மறுசீரமைப்பை நிறைவேற்றுவதற்கு நாம் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம்.
சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவின் கீழ் புதிய தேர்தல் முறையின் கீழ் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
சிறு கட்சிகள் தமது யோசனைகளை ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளன.
20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றிய பின்னரே பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும். தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. பழைய முறையின் கீழ் தேர்தல் நடத்துமாறு சில தரப்பினர் கோருகின்றனர். சிலர் வீரர்களாக முயல்கின்றனர். ஆனால் தேர்தல் மறுசீரமைப்பை முன் வைத்தால் பயந்து ஓடுகின்றனர்.
பழைய முறைபடியே தேர்தல் நடத்துவதாக ஐ. தே. க. அமைச்சர்கள் சிலர் கூறியிருக்கிறார்கள். இவர்களுக்கு பாராளுமன்றத்தில் எத்தனை எம்.பிக்கள் உள்ளனர். இவர்கள் கூறுவதை ஏற்க முடியாது.
உள்ளூராட்சி சபை தேர்தல்கள் புதிய முறையின் கீழே நடத்தப்பட வேண்டும். இது தொடர்பான சட்டம் நிறைவேற் றப்பட்டுள்ள போதும் அது குறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்னும் வெளியிடப்படவில்லை. அதனாலே உள்ளூராட்சி சபைகளை ஒத்திவைக்குமாறு கோருகிறோம். எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தகமானி அறிவித்தல் வெளிவரும் வரை உள்ளூராட்சி சபைகளின் காலத்தை நீடிக்க வேண்டும் என்றார்.
எமது எம்.பிக்கள் பொது சொத்து மோசடி சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படுகின்றனர். ஆனால் இந்த சட்டத்தின் கீழ் உட்படாத குற்றச்சாட்டுகளுக்கே விளக்கமறியலில் வைக்கப்படுகின்றனர். மோசடிகள் குறித்து விசாரணை நடத்துவதை நாம் எதிர்க்கவில்லை. உரிய சட்ட அடிப்படையில் விசாரணைகள் இடம்பெற வேண்டும். நிதி மோசடி விசாரணை பிரிவின் விசாரணைகளை ஏற்க முடியாது என்றார்.