26122024Thu
Last update:Wed, 20 Nov 2024

முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு: ஆரம்ப நிகழ்வு வவுனியாவில்

வடக்கு மாகாணத்தில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான விசேட மாதாந்த கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு நாளை மறுதினம் வியாழக்கிழமை வவுனியாவில் நடைபெறவுள்ளது. வடக்கு மாகாணத்தில் யுத்தத்தினாலும் ஏனைய விபத்துக்களினாலும் காயமடைந்து முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு சுயமாக இயங்கமுடியாதவர்களுக்கு இக்கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. வடக்கு மாகாண சபை பொறுப்பேற்கப்பட்ட பின்னர் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான விசேட பராமரிப்பு நிலையம் வவுனியா பம்பைமடு ஆயர்வேத வைத்தியசாலை வளாகத்தில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான விசேட மாதாந்த கொடுப்பனவு வழங்கும் செயற்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் வியாழக்கிழமை முற்பகல் 10 மணிக்கு வவுனியா பம்பைமடுவில் அமைந்துள்ள வைகறை புனர்வாழ்வு நிலையத்தில் நடைபெறவுள்ளது. இதில் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 40 பயனாளிகள் முதற்கட்ட கொடுப்பனவை பெறவுள்ளனர். இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை, சமூகசேவைகள், புனர்வாழ்வு, சிறுவர் நன்னடத்தை மற்றும் மகளிர் விவகார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார்.