இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகளின் உதவி செயலாளர் நாயகமும், ஆசிய மற்றும் பசுபிக் வலயத் தலைவருமான ஹொலிங் ஷு இலங்கை விஜயத்தின் முதற் கட்டமாக வடக்கிற்கு சென்றுள்ளார்.
அதன் முதல் கட்டமாக முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளார். அந்த வகையில் ஐ.நா அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக முல்லைத்தீவு, பனங்காமம் பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஜீவனோபாய திட்டங்களை அவர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
நோர்வே மற்றும் நியூசிலாந்து அரசாங்கத்தின் உதவியுடனும், ஐ.நா அபிவிருத்தித் திட்டத்தின் வழிகாட்டலின் கீழும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு ஜீவனோபாய உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்படி விவசாயம், பண்ணை வளர்ப்பு போன்ற திட்டங்கள் அங்கு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை வடமத்திய மாகாணங்களில் ஐ.நா அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டங்களையும் ஹொலிங் ஷு பார்வையிட்டு சென்றார் என தெரிவிக்கப்படுகின்றது.