எதிர்க்கட்சித் தலைவர் சர்ச்சை தொடர்பான சபாநாயகரின் தீர்ப்பு நேற்று பாராளுமன்றத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் தனது தீர்ப்பை பிரிதொரு தினத்தில் அறிவிப்பதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார்.
இது தொடர்பாக தான் ஆழமாக ஆராய்ந்து வருவதாக குறிப்பிட்ட அவர் எப்பொழுது தீர்ப்பு வழங்க முடியும் என்று கூற முடியாது எனவும் தெரிவித்தார்.
பாராளுமன்றம் நேற்று சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் தலைமையில் கூடியது. இதன் போது எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் குறித்து குமார வெல்கம (ஐ.ம.சு.மு) வினவினார். இதனைத் தொடர்ந்து வேறு எம்.பிக்களும் கேள்வி எழுப்பினார்கள். விமல் வீரவன்ச எம்.பி. பாராளுமன்றத்தை கலைக்கும் வரை இது குறித்து ஆராய்வீர்களா? சபாநாயகர் காலம் குறித்து உறுதியாக கூற முடியாது.
அநுர திசாநாயக்க எம்.பி. உங்களது ஆய்வு முடிவடையும் வரை நிமல் சிறிபால டி சில்வா தான் எதிர்க் கட்சித் தலைவராக இருப்பாரா? சபாநாயகர், அதுவரை உங்களுடைய விருப்பத்துக்குட்பட்டு அவர் இருப்பார். நீங்கள் இணைந்து எதிர்க் கட்சித் தலைவரை தெரிவு செய்யுங்கள் என்றார்.