யுத்தம் காரணமாக வடக்கு, கிழக்கில் சொந்த காணிகளை இழந்தவர்களுக்கு காணிகளை உரித்துடையதாக்கும் விதத்தில் ஆட்சியுரிமை விசேட ஏற்பாடுகள் சட்டம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இப்புதிய விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழ் 1993 மே மாதம் 01 ஆம் திகதியிலிருந்து 2009 மே மாதம் 01 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் தமது சொந்த இடங்களை விட்டுச் சென்றவர்களின் காணிகளின் உரித்தை உறுதி செய்வதற்கு இந்த விசேட ஏற்பாடுகள் சட்டம் கொண்டு வரப்படுகிறது.
இந்த சட்டத்திருத்தத்தின் ஊடாக வடக்கு, கிழக்கு பகுதிகளிலுள்ள காணிகளின் உண்மையான உரித்துடையவர்கள் பாதுகாக்க ப்படுவர். தற்போது நடை முறையிலுள்ள ஆட்சியுரிமை சட்டத்தின்படி 10 வருடங்களுக்கு குறையாத காலத்தில் காணியில் வதிவார்களாயின் அவர்களுக்கே காணி உரித்தாகும் என்பதனால் உண்மையான காணி உரித்துடையவர்களுக்கு வடக்கு, கிழக்கில் அநீதி இழைக்கப்படுவதாக அமைகிறது.
இதனை நிவர்த்திக்கும் நோக்கிலேயே புதிய ஆட்சியுடமை விசேட ஏற்பாடுகள் சட்டம் கொண்டு வரப்படுகிறது. இதனூடாக வடக்கு, கிழக்கில் உண்மையான காணி உரிமையாளர்களை இனம்கண்டு விசேட நிவாரணம் கிடைக்க வழி ஏற்படுகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய ஏற்படுத்தப்பட்ட சர்வ மத தலைவர்கள் அடங்கிய குழுவினரின் வேண்டுகோளுக்கு அமையவே இந்த ஏற்பாடுகளை நீதி அமைச்சர் கொண்டு வரவுள்ளார்.