15012025Wed
Last update:Tue, 07 Jan 2025

பிரதமர் இன்று யாழ். விஜயம்; ஹாட்லி கல்லூரியில் ஆய்வு கூடம் திறப்பு

யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை இன்று, மாலை (27) 2.00 மணிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திறந்து வைப்பார். கல்வி இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணனும் இதில் கலந்துகொள்வார்.

யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை வருகை தருகின்றார். காலை 10.00 மணிக்கு மகளிர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் வீரசிங்கம் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசாக்கு உணவு வழங்கும் நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளார்.

பிரதமருடன் மகளிர் விவகார அமைச்சர் ரோசி சேனநாயக்க, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரும் இணைந்து கொள்ளவுள் ளனர்.யாழ்ப்பாண கச்சேரியில் யாழ்ப் பாணத்தில் மக்கள் பிரதிநிதிகளையும் அதிகாரிகளையும் சந்தித்து இங்கு நிலவும் குறைபாடுகள் அபிவிருத்தி தொடர்பாகவும் பிரதமர் கலந்துரையாடவுள்ளார்.

இதன் பின்னர் யாழ்ப்பாணம் பருத்தித் துறை ஹாட்லி கல்லூரியின் தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை பிரதமர் ரணில் விக்கிரம சிங்க, கல்வி இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருணன் ஆகியோர் இணைந்து திறந்து வைக்கவுள்ளனர். மாலை 3.30 மணிக்கு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தேசிய கல்லூரிகளின் அதிபர்களை சந்தித்து அவர்களுடைய பிரச்சினை தொடர்பாகவும் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்திகள் தொடர்பாகவும் கலந்துரையாடவுள்ளார்.

இக் கலந்துரையா டலில் கல்வி இராஜாங்க அமைச்சரும் கலந்துகொள்ள வுள்ளதோடு கல்வித் திணைக்களத்தின் அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளனர். நல்லூர் ஆலயத்திற்கும், யாழ்ப்பாண பேராயரையும் அதே நேரத்தில் பள்ளி வாசல் ஒன்றிற்கும் பிரதமர் விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.