புலம் பெயர்ந்தவர்கள் எவ்வித அச்சமும் இன்றி தாராளமாக இலங்கை க்கு வரலாமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். தமிழ் டயஸ்போரா அமைப்புக்கள் எல்லாம் பிரிவினைக்காகச் செயற்பட வில்லையென்பதை தான் இலண்டன் சென்றிருந்தபோது நேரடியாக அறிந்து கொண்டதாகத் தெரிவித்த ஜனாதிபதி, இலண்டனில் ஒருசில அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறினார்.
ஊடக நிறுவனங்களின் தலைவர்கள், பத்திரிகை ஆசிரியர்களை ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்றுக்காலை சந்தித்த ஜனாதிபதி இது பற்றி கூறினார். நான் இலண்டன் சென்றிருந்தபோது தமிழ் டயஸ்போரா அமைப்புக்களைச் சேர்ந்த சில பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினேன்.
அங்கு ஈழம் பதாகைகளுடன் சிலர் நின்றனர். என்றாலும், சகல தமிழ் டயஸ்போரா அமைப்புக்களும் பிரிவினைக்காக நிற்கவில்லை. என்னைச் சந்தித்த சில அமைப்புக்களின் பிரதிநிதிகள், “ஏன் எங்களை ‘தமிழ் டயஸ்போராக்கள்’ என அழைக்கிaர்கள் என கேட்டனர். அதேநேரம் நாங்கள் ஈழம் கேட்கவில்லை. இலங்கைக்கு வருவதற்கே விரும்பு கிறோம்” என உருக்கமாகக் கேட்டுக் கொண்டனர்.
இன்னும் ஒரு விடயத்தையும் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். “நாம் பிரிவினைக்காக நிற்கவில்லை. கடந்த கால ஆட்சியாளர்களே இப்படி எங்களை சந்தேகக் கண்ணோடு பார்த்துப் பார்த்து ஓரங்கட்டினார்கள். ஆகவே, புதிய அரசாங்கம் எங்களையும் ஏற்று செயற்பட வேண்டும் என்றனர்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். இது தான் இன்றைய யதார்த்த நிலை என்று செய்தியாளர்களிடம் தெரிவித்த அவர், இந்தப் பிரச்சினையை இப்படியே இழுத்துக்கொண்டு செல்லமுடியாது. பேசித் தீர்க்கவே வேண்டும். இது தொடர்பாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சரவையில் பேசி தீர்வுகாண்போம் எனவும் கூறினார்.