* 2015 முஸ்லிம்களின் பிறப்பு வீதம் 3.3
* சிங்களவர், தமிழர்களின் பிறப்பு வீதம் 2.3
சனத்தொகை மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களத்தின் அறிவிப்பின் படி இலங்கையின் மொத்த சனத்தொகை 2012 மார்ச் மாத கணக்கெடுப்பின்படி 2 கோடியே 40 இலட்சம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சனத்தொகை தொடர்பான சிரேஷ்ட பேராசியர் இந்திரலால் டி சில்வா நேற்றுத் தெரிவித்தார்.
2015 ஆம் ஆண்டின் புள்ளி விபரங்களின் படி இலங்கை முஸ்லிம் களின் மொத்த பிறப்பு வீதம் 3.3 ஆக வும் இந்திய தமிழ் மக்களின் மொத்த பிறப்பு வீதம் 2.9 ஆகவும் இலங்கைத் தமிழ் மற்றும் சிங்கள மக்களின் மொத்த பிறப்பு வீதம் 2.3 ஆகவும் காணப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
2011 ஆம் ஆண்டின் சனத்தொகைப் புள்ளி விபரங்களின்படி சிங்கள மற்றும் இலங்கைத் தமிழ் மக்களின் மொத்த பிறப்பு வீதங்களை விடவும் முஸ்லிம்களின் மொத்த பிறப்பு வீதம் அதிகமாகக் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.
அதேநேரம் திருகோணமலை, அம்பாறை, நுவரெலியா, அநுராதபுரம், மொனராகல ஆகிய மாவட்டங்களில் மொத்த பிறப்பு வீதம் அதிகரித்துக் காணப்படுகின்ற இதேவேளையில் கொழும்பு, யாழ்ப்பாணம், களுத்துறை, காலி ஆகிய மாவட்டங்களில் மொத்த பிறப்பு வீதம் குறைவாகக் காணப் படுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
உலக சனத் தொகை தினத்தின் நிமித்தம் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் அனுசரணையில் குடும்ப சுகாதார பணி யகம் கொழும்பு ஹோல்பேஸ் ஹோட்ட லில் ஏற்பாடு செய்து நடத்திய செய்தியாளர் மாநாட்டில் விசேட பேச்சாளராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஆரோக்கியம் மற்றும் நிலையான அபிவிருத்திக்கான சனத்தொகை என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இச்செய்தியாளர் மாநாட்டில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், இலங்கையில் அண்மைக்காலம் முதல் இள வயதுத் திருமணங்களும் மறுமங்களும் அதிகரித்துள்ளன. மொத்தப் பிறப்பு வீதங்கள் அதிகரிப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய பின்புலக் காரணி.
1990 களில் 25 வயதுக்கு மேற்பட்ட பின்னர் தான் அநேகர் திருமணம் முடித்தனர். அதற்கு வேலை வாய்ப்பின்மையும் ஒரு முக்கிய காரணியாக விளங்கியது. ஆனால் இன்று வேலை வாய்ப்பின்மை 5 வீதத்திற்கும் குறைவாக உள்ளது. 95 வீதமானோர் ஏதாவது தொழிலைச் செய்யக்கூடியவர்களாக உள்ளனர்.
அது அவர்கள் திருமண வாழ்வில் இணைந்திட வழி வகுத்துள்ளது. பெண்கள் தொழிலுக்கு செல்வதும் குறைவடைந்துள்ளது. அத்தோடு சுனாமி அனர்த்தம் காரணமாக அதிகளவு குழந்தைகள் உயிரிழந்தன. இவை அனைத்தும் இந்நாட்டின் மொத்த பிறப்பு வீத அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளன.
ஒரு காலத்தில் வருடமொன்றுக்கு 150,000 - 225,000 வரையான கருச்சிதைவுகள் இந்நாட்டில் இடம்பெற்றன. தற்போது இளமைக்கால கருத்தரிப்புக்கள் ஒரு முக்கிய பிரச்சினையாக விளங்குகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
இச்செய்தியாளர் மாநாட்டில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித மஹீபால உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.