தேர்தல் நடவடிக்கைகளைக் கண் காணிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் 70 கண்காணிப்பாளர்களை அனுப்பவுள்ளது. முதலாவது குழுவின் தலைவர் எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கை வரவிருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்துக்கு விடுத்த வேண்டுகோளுக்கு அமைய 70 தேர்தல் கண்காணிப்பாளர்கள் அனுப்பப்படவுள் ளனர். இதனைவிட பொதுநலவாய அமைப்பின் தேர்தல் கண்காணிப் பாளர்களை அனுப்புமாறு கோரிக்கை விடுத்திருப்பதாகவும், தமது கோரிக்கைக்கு அமைய 6 முதல் 10 பேரைக்கொண்ட குழு அனுப்பிவைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதனைவிட சார்க் நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் சுமார் 30 பேர் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். தேர்தல்கள் திணைக்களம் இவர்களுடன் நேரடியாக இணைந்து இந்தக் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எதிர்வரும் காலங்களில் வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் இன்றி சுயாதீனமான தேர்தலை நடத்த முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், உள்ளூர் கண்காணிப்பாளர்கள், ஊடகங்கள், சிவில் அமைப்புக்கள் உள்ளிட்ட சகல தரப்புடனும் இணைந்து நீதியான, சுயாதீனமான தேர்தலை நடத்த முடியும் என்றும் கூறினார்.
இருந்தபோதும், தேர்தலை சுயாதீனமாக நடத்தமுடியாது என்ற விமர்சனங்கள் இருப்பதாலேயே வெளிநாடுகளைச் சேர்ந்த மேலதிக கண்காணிப்பாளர்களை அழைக்கவேண்டி ஏற்பட்டிருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மேலும் சுட்டிக்காட்டினார். அதேநேரம், நாட்டு மக்களும், அரசியல் பிரதிநிதிகளும் கள்ள வாக்களிக்க இடமளிக்கமாட்டார்கள் என்ற பூரண நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, தேர்தலை சுயாதீனமாக நடத்தும் நோக்கில் வாக்களிப்பு நிலையங்களில் மாற்றங்களைச் செய்ய வேண்டி ஏற்பட்டுள்ளது எனக் குறிப்பிட்ட அவர், பெளத்த மதகுருமார் பலர் இம்முறை தேர்தலில் போட்டியிடுவதால் அவர்களுடன் தொடர்புபட்ட பெளத்த விகாரைகளை வாக்களிப்பு நிலையங் களாகப் பயன்படுத்த முடியாதிருப்பதாகவும் கூறினார். 100 முதல் 150 வரையான பெளத்த விகாரைகளை அவ்வாறு பயன்படுத்த முடியாது போயிருப்பதால், அவற்றுக்குப் பதிலாக மாற்று இடங்கள் தெரிவுசெய்யப்படும் என்றும் தெரிவித்தார்.