116 குளங்கள் நிரம்பின
நாட்டில் கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் மழை காரணமாக 15 பாரிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டு மேலதிக நீர் வெளியேற்றப்படுகின்றது.
இதேநேரம் 24 பாரிய குளங்கள் அடங்கலாக 92 நடுத்தரக் குளங்களும் நிரம்பி வழிவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் உயரதிகாரிகள் நேற்றுத் தெரிவித்தனர்.இது தொடர்பாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்வள முகாமைத்துவ பணிப்பாளர் பொறியியலாளர் ஜானகி மிகஸ்தென்ன குறிப்பிடுகையில், அநுராதபுரம், மட்டக்களப்பு, அம்பாறை, குருநாகல், புத்தளம், ஹம்பாந்தோட்டை ஆகிய ஆறு மாவட்டங்களிலுள்ள 14 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டு மேலதிக நீர் வெளியேற்றப்படுகின்றன அத்தோடு இம் மாவட்டங்களிலுள்ள 22 பாரிய குளங்களும் 43 நடுத்தர குளங்களும் நிரம்பி வழிவதாகவும் அவர் கூறினார்.
வட மாகாண நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர் பொறியியலாளர் சோ. சண்முகானந்தன் குறிப்பிடுகையில், இரணைமடு நீர்த்தேக்கத்தின் 11 வான் கதவுகளும் திறக்கப்பட்டு மேலதிக நீர் வெளியேற்றப்படுகின்ற இதேநேரம் வட மாகாணத்திலுள்ள 51 குளங்கள் நிரம்பி வழிவதாகவும் அவர் கூறினார்.
நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர் மீகஸ்தென்ன மேலும் குறிப்பிடுகையில், கடந்த சில தினங்களாகப் பெய்துவரும் தொடர் மழை காரணமாக அநுராதபுரம், மட்டக்களப்பு, அம்பாறை, குருநாகல், புத்தளம், ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலுள்ள 14 பாரிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டு மேலதிக நீர் வெளியேற்றப்படுகின்றன. அத்தோடு இம் மாவட்டங்களிலுள்ள 22 பாரிய குளங்களும். 43 நடுத்தரக் குளங்களும் நிரம்பி வழிகின்றன.
அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள நாச்சியாதீவு ஏருவெவ நுவரவெவ ஆகிய நீர்த்தேக்கங்களதும் மகாகனதராவ, இராஜாங்கனை, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள புனானை, உன்னிச்சை, உருகாமம் ஆகிய நீர்த்தேக்கங்களதும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள லுனுகம்வெகர, வேரகல ஆகிய நீர்த்தேக்கங்களதும், புத்தளம் மாவட்டத்திலுள்ள தப்போவ, அம்பாறை மாவட்டத்திலுள்ள ரம்புக்கன் ஓயா, குருநாகல் மாவட்டத்திலுள்ள தெதுரு ஓயா என முறையே மூன்று நீர்த்தேக்களுமாக 13 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டு மேலதிக நீர் வெளியேற்றப்படுகின்றன.
இதேவேளை அநுராதபுரம் மாவட்டத்தில் நான்கு பாரிய குளங்களும் குருநாகல் மாவட்டத்தில் ஐந்து பாரிய குளங்களும் அடங்கலான 22 பாரிய குளங்களும் நிரம்பி வழிகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.