25112024Mon
Last update:Wed, 20 Nov 2024

ம்பூர்: தடை நீக்கப்பட்ட போதும் 15இன் பின்பே மீள்குடியேற்றங்கள்

விசாரணையில் சாதகமான நிலைவருமென எதிர்பார்ப்பு

சம்பூரில் முதலீட்டு ஊக்கு விப்பு வலயத்துக்கு வழங்கப் பட்ட காணிகளை விடுவிக்கும் ஜனாதி பதியின் உத்தரவுக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத்தடை நீக்கப்பட்டுள்ளபோதும், எதிர்வரும் 15ஆம் திகதியின் பின்னரே அப்பகுதியின் மீள்குடியேற்றப் பணிகள் துரிதப்படுத்தப்படும் என எதிர்பார்க் கப்படுகிறது.

நீதிமன்றத்தின் இடைக்காலத்தடை நீக்கப்பட்டு அப்பகுதிக்கு மக்கள் சென்று தமது காணிகளைத் துப்புரவுசெய்து வருகின்றபோதும், காணி விடுவிக்கப் படுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை எதிர்வரும் ஜூன் 15ஆம் திகதி நடைபெறவிருப்பதால் அதன் பின்னரே உறுதியானதொரு முடிவு எடுக்கப்பட்டு மீள்குடியேற்றப் பணிகள் துரிதப்படுத்தப்படும் எனத் தெரியவருகிறது.

நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்தே அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து உறுதி யாகக் கூறமுடியும். காணிகளை விடுவிப் பதற்கு வழங்கப்பட்ட தடையுத்தரவு நீக்கப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னான்டோ தெரிவித்தார்.

மக்கள் தமது காணிகளுக்குச் செல்வது தொடர்பில் அவரிடம் கேட்டபோது, “நீதிமன்றத்தில் இந்த விடயம் தொடர்பான வழக்கு இருப்பதால் இது தொடர்பில் தெரிவிக்கும் கருத்துக்கள் வழக்கில் தாக்கம் செலுத்திவிடும். எனவே இதுபற்றி எதுவும் கூற விரும்பவில்லை” என்றார்.

நீதிமன்றத் தடையுத்தரவு நீக்கப்பட்ட பின்னர் மக்கள் தமது காணிகளுக்குள் சென்று அவற்றைத் துப்புரவுசெய்யும் பணியில் ஈடுபட்டிருப்பதாக கிழக்கு மாகாணசபை அமைச்சர் தண்டாயுதபாணி தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தண்டாயுதபாணி ஆகியோர் சம்பூருக்குச் சென்று மக்களைப் பார்வையிட்டிருந்தனர். சம்பூர் மீள்குடி யேற்றத்தைப் பாதிக்கும் வகையில் நீதிமன்றத்தின் தீர்ப்பு அமையாது என நம்புவதாகக் குறிப்பிட்ட தண்டாயுதபானி, நீண்டகாலமாக தமது சொந்தக் காணிக ளுக்குத் திரும்பமுடியாதிருந்த மக்கள் வெகு ஆவலாக இருப்பதாகவும் கூறினார்.

மக்களுக்குக் காணிகள் வழங்கப்படுவதைத் தடுக்கும் வகையிலேயே குறித்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதாகக் கருதவேண்டியுள்ளது. எனினும், ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய முதலீட்டு ஊக்குவிப்பு சபையால் வழங்கப்பட்ட 818 ஏக்கர் காணிகள் மீண்டும் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்தக் காணிகளுக்கான உத்தியோகபூர்வ ஆவணங்களை வழங்கும் நடவடிக்கைகள் வெகு விரைவில் அதிகாரிகளால் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த எட்டு வருடங்களுக்கும் மேலாக சம்பூரில் பொதுமக்கள் காணிகள் முதலீட்டு ஊக்குவிப்புச் சபைக்காக சுவீகரிக்கப்பட்டன. இந்தக் காணிகள் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருந்தபோதும் அங்கு எதுவித செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்படவில்லை. தமது காணிகளை துரிதமாகத் தமக்கு வழங்க வேண்டும் என்பதே சம்பூர் மக்களின் ஆதங்கமாகவுள்ளது.

சம்பூர் காணி விவகாரம் தொடர்பில் 15ஆம் திகதி நடைபெறவிருக்கும் நீதிமன்ற விசாரணையின் போது மீள்குடியேற்ற அமைச்சின் சார்பில் நியமிக்கப்பட்ட குழு அறிக்கையொன்றை சமர்ப்பிக் கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.