அமரத்துவமடைந்த கண்டி அஸ்கிரிய பௌத்த பீடத்தின் மகாநாயக்க தேரர் கலகம ஸ்ரீஅந்த தஸ்ஸி தேரரின் இறுதிக் கிரியைகள் இடம்பெறும் 13ம் திகதியை தேசிய துக்க தினமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. அதேவேளை, மகாநாயக்க தேரரின் இறுதிக்கிரியைகளை பூரண அரச மரியாதையுடன் நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதி பதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட அதிகாரிகளைப் பணித்துள்ளார்.
அத்துடன் இறுதிக் கிரியைகள் உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்கும் மகாநாயக்க தேரர்கள், மதத் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை வழங்கியுள்ளார்.
மகாநாயக்க தேரரின் இறப்பு செய்தி கேட்டு தாம் பெரும் வேதனையடைந்ததாக குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி; மகாநாயக்க தேரர் அவர்கள் நாட்டுக்கும் புத்த சாசனத்திற்கும் சமூகத்திற்கும் செய்த சேவை அளப்பரியதென்றும் இதனால் அவர் இலங்கை மக்களினதும் உலக பௌத்த மக்களினதும் பேரபிமானத்திற்கும் கௌரவத்திற்கும் உரித்தாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.