25112024Mon
Last update:Wed, 20 Nov 2024

நல்லாட்சி அரசு இன்றுடன் 100 நாள் பூர்த்தி

Sr Lanka President logo1ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் இன்று நூறு நாட்களை நிறைவு செய்கிறது. ஜனவரி 8ம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதன் பின்னர் ஆட்சிப் பொறுப்பேற்ற அரசாங்கம் இன்று 23ம் திகதி நூறு நாளைப் பூர்த்தி செய்கிறது.

இந்த நூறு நாள் குறுகிய காலகட்டத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியில் நூற்றுக்கு 85 வீதத்தை நிறைவு செய்துள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுகின்றது. இதில் கிராமப்புற மற்றும் சாதாரண நடுத்தர மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளமை முக்கிய அம்சமாகும்.

நூற்றுக்கு 85 வீத வேலைத் திட்டங்கள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில் மீதமான 15 வீத வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அரசின் நூறு நாள் வேலைத் திட்டத்தில் சாதாரண குடும்ப வாழ்க்கைச் செலவு 3,700 ரூபாவால் குறைந்துள்ளது. குடிசன புள்ளிவிவர மதிப்பீட்டுத் திணைக்களத்தின் அறிக்கைகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன. பத்து வருடங்களுக்குப் பின்னர் கடந்த மார்ச் மாதத்தில் வாழ்க்கைச் செலவு குறைந்துள்ளதாக இதன் மூலம் தெளிவாகின்றது.

மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைப்பது, ஜனநாயகத்தை நாட்டில் நிலைநாட்டி நல்லாட்சியை ஏற்படுத்துவது, இலஞ்ச ஊழல் மோசடிகளில் சம்பந்தப்பட்டோரை சட்டத்தின் முன் நிறுத்தல் போன்ற வாக்குறுதிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு வழங்கியிருந்தார். இதில் பெருமளவு வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இது மக்களுக்குக் கிடைத்த வெற்றி என பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது.

அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத் திட்டத்தைக் கண்காணிப்பதற்கென பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் கலாநிதி சரித்த ரத்வத்தயின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

அரசாங்க ஊழியர்களின் ஐயாயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு, ஓய்வூதியக்காரர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு, சமுர்த்தி கொடுப்பனவை நூற்றுக்கு 200 வீதமாக அதிகரித்துள்ளமை, நெல், தேயிலை, இறப்பர், உருளைக்கிழங்கு போன்ற முக்கிய உற்பத்திப் பொருட்களிற்கு நிர்ணய விலைகளை ஏற்படுத்தியமை, எரிபொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளமை போன்ற நடவடிக்கைகள் மக்களின் வருமானத்தை அதிகரித்து செலவுகளை குறைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

கர்ப்பிணித் தாய்மாருக்கு வழங்கப்படும் 20,000 ரூபா பெறுமதியான போஷாக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்படு கின்றமையும் இதில் முக்கிய அம்ச மாகும். ஜனநாயகத்தை நிலைநாட்டுவதன் மூலம் நல்லாட்சியை முன்னெடுக்கும் வகையில் புதிய சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை 19 வது அரசியலமைப்புத் திருத்தத்தைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள போதும் அதனை நூறு நாட்கள் வேலைத் திட்டத்தில் நிறைவேற்ற முடியாமற் போனமையும் குறிப்பிடத்தக்கது.