23112024Sat
Last update:Wed, 20 Nov 2024

*10 இலட்சம் தொழில் வாய்ப்புகள் * 45 பொருளாதார வலயங்கள் * 2500 பிரதேச பொருளாதார கிராமங்கள்: மக்கள் வாழ்வை சுபீட்சமாக்கும் வேலைத்திட்டம் அடுத்தவாரம் - பிரதமர்

ranil wickramsinghe 2நாட்டையும் மக்களையும் பொருளாதாரத்தில் கட்டியெழுப்பும் மாபெரும் வேலைத் திட்டத்தை அடுத்த வாரம் வெளியிடவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்

பொருளாதாரம், தொழில் வாய்ப்பு, அபிவிருத்தி. உட்கட்டமைப்பு மற்றும் மக்களுக்கான சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் ஐந்து கேந்திர திட்டமாக இது நடைமுறைப்படுத்தப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

பத்து இலட்சம் தொழில் வாய்ப்புகளை உருவாக்குதல், 45 பொருளாதார வலயங்கள், 2500 பிரதேச பொருளாதார கிராமங்களை உருவாக்குதல் உட்பட மக்கள் வாழ்வை சுபீட்சமாக்கும் திட்டமாக இது முன்னெடுக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

புளத்சிங்களவில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று புளத்சிங்கள நகரில் நடைபெற்றது. கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும உட்பட வேட்பாளர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர்:-

இம்முறை தேர்தல் கடந்த 10 வருடத்திற்கு முன் இடம்பெற்ற தேர்தலை விட வித்தியாசமானது. குறிப்பாக வேட்பு மனுவின் பின்னர் ஊர்வலங்கள் இருக்கவில்லை. எவரும் மோதிக்கொள்ளவில்லை. மிக அமைதியாக அனைத்து செயற்பாடுகளும் இடம்பெற்றன.

கடந்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் நாடெங்கிலும் ஊர்வலங்களுடன் மக்கள் மோதிக்கொண்ட நிகழ்வுகளும் இடம்பெற்றன. அவற்றுக்கு நாம் இம்முறை இடமளிக்கவில்லை.

கட்அவுட்வைக்க இடமளிக்கவில்லை. குறிப்பாக எனது உருவம் அடங்கிய கட்அவுட் எங்குமே கிடையாது. போஸ்டர்களுக்கும் இடமில்லை. இவை தேர்தல் சட்டத்திற்கு முரணானவை. நான் தொலைக்காட்சியில் கலந்துரையாடல் நடத்துவதானால் பணம் செலுத்தியே அதனைச் செய்ய வேண்டும்.

இம்முறை தேர்தலை நாம் சட்டங்களை முறையாகக் கடைப்பிடித்தே நடத்துவோம். இதற்கு முன் கடந்த 10 வருடங்களாக எந்த தேர்தல் நடந்தாலும் அவை தேர்தல் சட்டங்களை மீறியதாக நடத்தப்பட்டன. சட்டங்கள் ஒரு சாராருக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்ட காலம் அது.

மதுபானம் பகிரப்பட்டது போதைப் பொருள் பகிரப்பட்டது. இன்னும் பல பகிரப்பட்டன. இம்முறை நாம் அவ்வாறான்றி அமைதியும் நேர்மையுமான தேர்தலை நடத்தவுள்ளோம். சட்டங்களை முறையாக முன்னெடுக்குமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளோம். மக்களின் ஒத்துழைப்பு இதற்கு மிக அவசியமாகும்.

கடந்த 8ம் திகதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கி நாம் நல்லாட்சிக்கு வித்திட்டோம். உயிர்களைப் பலிகொடுத்து மோதிக்கொள்ளும் தேர்தலா அல்லது அமைதியும் நேர்மையுமான தேர்தலா என மக்கள் சிந்தித்துச் செயற்படுவது முக்கியம்.

மக்கள் தமது எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

சில தினங்களுக்கு முன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா, தேர்தல் சட்டங்களைப் போட்டு அவர்களைக் கட்டுப்படுத்தியதாகவும் ஊர்வலமில்லை மோதலில்லை, ஜொலியில்லை என்றும் கூறியுள்ளார்.

எமது எதிர்காலம் பற்றி சிந்திக்க வேண்டிய காலம் இது. ஆகஸ்ட் 17ம் திகதி மக்கள் எடுக்கும் தீர்மானம் மிக முக்கியமானது.

இது எனது தேர்தலோ மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தலோ அல்ல. ஜனாதிபதியின் தேர்தலுமல்ல. இது உங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தல்.

மஹிந்த ராஜபக்ஷ மக்களின் எதிர்காலம் பற்றி பேசவில்லை. வீரர் என்றார் துட்டகைமுனு என்றார். அதற்கு வாக்களிக்கச் சொன்னார். பிறரைத் தூற்றினார். எனினும் ஒரு திட்டம் இருக்கவில்லை.

10 வருடம் நாட்டை ஆட்சி செய்தார் எனினும் மக்களின் எதிர்காலத்தைப் பற்றி யன்றி தமது எதிர்காலம் பற்றியே சிந்தித்தார். எல்லாவற்றிலும் நன்றாக உழைத்தனர் ராஜபக்ஷ குடும்பத்தினர்.

இப்போது எல்லாம் வெளிவரும்போது தான் குரலை உயர்த்துகின்றனர். கல்வி சுகாதாரம் வீழ்ச்சி கண்டது சம்பளம அதிகரிக்கப்படவில்லை. பொருட்களின் விலை குறைக்கப்படவில்லை. மக்கள் ஒரு வேளையாவது ஒழுங்காக சாப்பிட முடியாமல் இருந்தபோது அவர்கள் சொகுசான உணவுகளையும் வாழ்க்கையையும் அனுபவித்தனர்.

சிறிய சிறிய விடயங்களே வெளிவந்துள்ளன. பெரியவை விரைவில் வெளிவரும். மக்களுக்கு பால் மா வாங்க மக்கள் கஷ்டப்பட்டபோது வெளிநாடுகளிலிருந்து சொக்கலேட் கொண்டு வந்து உண்டனர். இத்தகைய யுகம் இன்றும் இனியும் அவசியமா? மக்கள் இனி உங்கள் எதிர்காலம் பற்றி சிந்தியுங்கள். அதனை சிந்தித்தே நாம் ஐக்கிய தேசிய முன்னணியை உருவாக்கி செயற்படுகின்றோம்.

எமது 100 நாள் திட்டம் முடிவுற்றது. இனி உங்கள் எதிர்காலத்தை சுபீட்சமாக்கும் வேலைத் திட்டம் அடுத்த வாரம் நாம் வெளியிடவுள்ளோம். ஐந்து கேந்திரங்களை உட்படுத்திய மாபெரும் வேலைத் திட்டம் அது.

பொருளாதாரம் தொழில் வாய்ப்பு உட்கட்டமைப்பு, ஊழலற்ற நாடு. சுதந்திரத்தை உறுதிப்படுத்தல் எதிர்காலத்திற்கான செயற் திட்டங்கள் என இந்த ஐந்து கேந்திர திட்டங்களில் உள்ளடங்குகின்றன.

நாட்டில் முக்கிய பிரச்சினையாகவுள்ள தொழில் வாய்ப்பு பிரச்சினைக்கு உரிய திட்டம் செயற்படுத்தப்படும். எதிர்வரும் ஐந்து வருடங்களில் 10 இலட்சம் தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படும். அதற்கான திட்டங்களை நாம் செயற்படுத்துவோம்.

சிறந்த கைத்தொழில் பேட்டைகள் உருவாக்கப்படும். தொழில் நுட்பம் விவசாயம், மீன்பிடி, தேயிலை, இறப்பர் தொழிலை மேம்படுத்தும் திட்டங்களும் இதிலடங்கும். மஹிந்த ராஜபக்ஷவால் 10 வருடங்களில் செய்ய முடியாததை நாம் நிறைவேற்றுவோம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.