பத்தாயிரம் ரூபா கொடுப்பனவை இன்று (2) முதல் ஓய்வூதியக் கொடுப்பனவுடன் சேர்க்கவிருப்பதாக பொதுநிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
வரவுசெலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் கூறினார். 2010ல் 2500 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவதாக கடந்த அரசாங்கம் கூறியது. ஆனால் அதனை நடைமுறைப் படுத்தியிருக்கவில்லை. ஆனால் தாம் வாக்களித்ததைப் போன்று 10 ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்கியதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்தக் கொடுப்பனவை வழங்குவதற்காக 13 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று முதல் 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு ஓய்வூதியக் கொடுப்பனவுடன் சேர்க்கப்படவுள்ளது. இந்தத் தொகையையும் இணைத்தே ஓய்வூதியம் கணிக்கப்படும் என அமைச்சர் கூறினார். அரச ஊழியர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வதற்கு அரசாங்கம் ஒருபோதும் நடவடிக்கை எடுக்காது.
யுத்தத்திற்குப் பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டதால் பொருளாதாரம் பின்னடைந்தது. 2009ஆம் ஆண்டு யுத்தத்தின் பின்னர் நாட்டை கட்டியெழுப்புவதற்கு பொன்னான சந்தர்ப்பம் ஏற்பட்டது. ஆனால் அதனை ராஜபக்ஷ அரசு பயன்படுத்தவில்லை.
இந்த வரவுசெலவுத்திட்டத்தினூடாக கல்விக்கும், சுகாதாரத்திற்கும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 3 தடவைகள் காஸ் விலைகளை குறைத்துள்ளோம். குழந்தை பால்மா 20 ரூபாவினால் குறைக்கப்பட்டது. பால்மா 90 ரூபாவினால் குறைத்துள்ளோம் என்றார்.