 யுத்த காலத்தில் நிறுத்தப்பட்ட ஐரோப்பிய நாடுகளுக்கான விமான சேவையை 10 வருடத்தின்பின் மீள ஆரம்பிக்கும் வகையில் முதற்கட்டமாக இலங்கைக்கும் ஒஸ்ரியாவுக்குமிடையிலான விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யுத்த காலத்தில் நிறுத்தப்பட்ட ஐரோப்பிய நாடுகளுக்கான விமான சேவையை 10 வருடத்தின்பின் மீள ஆரம்பிக்கும் வகையில் முதற்கட்டமாக இலங்கைக்கும் ஒஸ்ரியாவுக்குமிடையிலான விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 
இதற்கிணங்க நேற்றைய தினம் காலை 7.45 மணிக்கு ஒஸ்ரியாவின் வியனா நகரிலிருந்து போயிங் 767 - 300 ரக லிஷி 047 விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
இந்த விமானத்தில் உல்லாசப் பிரயாணிகள் மற்றும் வர்த்தகர்கள் என 125 பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இந்த விமான சேவை ஆரம்பகட்டமாக ஒஸ்ரியாவிலிருந்து கட்டுநாயக்கவிற்கு ஒரு தடவையும் கட்டுநாயக்கவிலிருந்து ஒஸ்ரியாவுக்கு ஒரு தடவையும் ஒரு வாரத்தில் இடம்பெறவுள்ளதுடன் எதிர்வரும் 2016 ஏப்ரல் முதல் வாரத்திற்கு மூன்று சேவைகளை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாடுகளுக்குமிடையிலான விமான சேவைக்கான வைபவ ரீதியான நிகழ்வு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் நிஹால் சோமவீரவின் தலைமையில் நடைபெற்றது. நேற்று விமான மூலம் கட்டுநாயக்க வந்தடைந்த பயணிகளை அவர் வரவேற்றார்.