தமிழகத்திலிருந்து இலங்கை அகதிகள் வருகை

tamilnadu refugees 1இலங்கையில் நிலவிய அசாதாரண சூழ்நிலையை அடுத்து இந்தியாவிற்கு சென்று அங்கு அகதிகளாக வாழ்ந்து வந்த சிலர் ) நாடு திரும்பினர்.

தமிழ்நாட்டு அகதிகள் முகாம்களில் தங்கியிருந்த சுமார் 32 குடும்பங்களைச் சேர்ந்த 65 பேர் இவ்வாறு நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். இவர்களை மீள்குடியேற்ற அமைச்சர் டி. எம். சுவாமிநாதன் வரவேற்றார். வருகை தந்த மக்களுக்கு ஐக்கிய நாடுகள் அகதிகள் ஸ்தாபனம் உதவிகளை வழங்கியுள்ளது.

மேலும் மக்கள் வங்கி இவர்களுக்கு சிறு தொகை உதவி தொகையை வழங்கியுள்ளதோடு அவர்களுக்கு வங்கிக் கணக்கொன்று ஆரம்பித்துக் கொடுத்துள்ளதாக மீள் குடியேற்ற அமைச்சர் டி. எம். சுவாமிநாதன் தெரிவித்தார்.

tamilnadu refugees 2இந்த குடும்பங்கள் சுய விருப்பின் பேரில் நாடு திரும்பியுள்ளதாகவும் அவர்களுக்கான சொந்த காணிகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எனினும் இவ்வாறு வருகை தந்தவர்கள் தங்களுக்கு காணிகள் இருப்பதாக உறுதி செய்கின்ற போதும் வீடுகள் இருக்கின்றதா இல்லையா என்ற சந்தேகத்தில் உள்ளனர்.

அவர்களை போக்குவரத்து வசதி கொடுத்து சொந்த இடங்களுக்கு அனுப்பியுள்ளதாகவும் அங்கு சென்று பிரச்சினைகள் இருப்பின் தனக்கு அறிவிக்குமாறும் அதற்கு தீர்வு பெற்றுக்கொடுக்க முடியும் என்று உறுதி அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் அநாவசிய சோதனை நடவடிக்கை இருந்ததால் நாடு திரும்ப இவர்கள் அச்சம் வெளியிட்டு வந்ததாகவும் ஆனால் இம்முறை புலனாய்வு பிரிவுடன் கலந்துரையாடி சோதனை நடவடிக்கைகளில் தளர்வு ஏற்படுத்தியதாகவும் இவ்விடயத்தில் குடிவரவு குடியகல்வு திணைக்களமும் ஒத்துழைப்பு வழங்கியதாகவும் அமைச்சர் கூறினார்.

நாடு திரும்பியவர்கள் சுமார் பத்து மற்றும் இருபது வருடங்கள் இந்திய அகதி முகாம்களில் வசித்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.