19042024Fri
Last update:Thu, 18 Apr 2024

சம்பூர் மீள் குடியேற்றத்தை துரிதப்படுத்த ஏதுவாக இராணுவ முகாம் இடமாற்றம்

சம்பூரில் இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியமர்த்துவதற்கு ஏதுவாக விதுர இராணுவ முகாம் முற்றாக அகற்றப்படும். ஆறு மாதங்களுக்குள் இந்த முகாமை வேறு இடத்திற்கு மாற்றி மக்கள் சொந்த இடங்களில் மீள்குடியமர் த்தப்படுவார்கள் என கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னான்டோ தெரிவித்தார்.

சம்பூர் மீள்குடியேற்றம் மற்றும் அங்குள்ள இராணுவ முகாமை அகற்றுவதன் பின்னணியில் எந்தவித வெளிநாட்டு அழுத்தங்களோ அல்லது அரசியல் நோக்கங்களோ இல்லையென்றும் அவர் கூறினார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப் பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபயக்கோன், பாதுகாப்பு செயலாளர் பி.எம்.யூ.டி.பஸ்நாயக்க, மீள்குடி அமைச்சின் செயலாளர் ரஞ்சினி நடராஜப்பிள்ளை, முப்படைத் தளபதிகள் உள்ளிட்ட பலர் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

237 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள சம்பூர் விதுர கடற்படை முகாம் அங்கிருந்து அகற்றப்பட்டு, 180 ஏக்கர் நிலப்பரப்புடைய பிறிதொரு பகுதிக்கு மாற்றப்படவுள்ளது. ஆறு மாத காலங்களுக்குள் இந்த முகாம் மாற்றப்படும். அதன் பின்னர் மக்களை மீள்குடியமர்த்த முடியும் என்றும் அவர் கூறினார்.

சம்பூரில் உள்ள கடற்படை முகாமை அகற்றி தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தப்படுவதாகவும், அரசியல் நோக்கங்கள் மற்றும் இந்தியாவின் அழுத்தங்களுக்காக இவ்வாறு செய்யப்படு வதாகவும் முன்வைக்கப்படும் குற்றச்சாட் டுக்களில் எதுவித உண்மையும் இல்லை யென்றும் கிழக்குமாகாண ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

சம்பூரில் மீள்குடியேற்றம் என்பது கடந்த அரசாங்கத்தால் உயர்நீதிமன்றத்துக்கும் பொது மக்களுக்கும் வழங்கப்பட்ட உறுதிமொழியாகும். இந்த உறுதிமொழியை அரசாங்கம் நிறைவேற்றவில்லை. கடந்த அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உறுதி மொழியை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதேதவிர, புதிதாக ஒன்றையும் மேற்கொள்ளவில்லையென அவர் தெரிவித்தார்.

பொருளாதார நடவடிக்கைகளுக்காக எடுக்கப்பட்ட நிலங்களில் பொதுமக்களின் நிலங்கள் காணப்பட்டால் அவை பொதுமக்களுக்கு மீண்டும் வழங்கப்படும். பொருளாதார நடவடிக்கைகளுக்கு வழங்க மாற்றுக்காணிகள் உள்ளதாகவும் கிழக்கு மாகாண ஆளுநர் கூறினார்.

சம்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் பல வருடங்களாக தற்காலிக கூடாரங்களின் கீழ் மழையிலும் வெய்யிலிலும் கஷ்டப் பட்டு வருகின்றனர். அவர்களுக்கு சொந்த வீடுகளை அமைத்துக் கொடுத்து தமது இடங்களில் மீளக்குடியமர்த்துவதற்கே அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மக்களின் கஷ்டங்களைத் தீர்ப்பதற்கு முயற்சிக்கும்போது கடற்படை முகாம்களை அகற்றி தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டி ருப்பதாக ஊடகங்கள் பிழையான பிரசாரங்களை மேற்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

விதுர கடற்படை முகாம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதும் சம்பூரில் மொத்தமாக இடம்பெயர்ந்த 1,272 குடும்பங்களைச் சேர்ந்த 4,070 பேரை ஒரேநேரத்தில் மீள்குடியமர்த்த எதிர்பார்த்தி ருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.