16042024Tue
Last update:Mon, 04 Mar 2024

பெருந்தோட்ட மக்களுக்கு காணி உறுதிகளை வழங்க அமைச்சரவை அங்கீகாரம்

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உறுதிகளை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும், 200 வருடகாலமாக முகவரியின்றி வாழ்ந்து வந்த மக்களுக்கு 100 நாட்களில் 7 பேர்ச்சஸ் காணியை பெற்றுக் கொடுத்து அரசாங்கம் அவர்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வேலாயுதம் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்துக்கு பாரிய பங்களிப்பை வழங்கி வந்த பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு முதற்கட்டமாக 1000 பேருக்கு எதிர்வரும் 25ஆம் திகதி காணி உறுதிகள் வழங்கப்பட உள்ளதாகவும் இந்த சம்பவம் வரலாற்று முக்கியத்துவமிக்க நிகழ்வென்றும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், மலையக மக்களுக்கு உறுதிப்பத்திரத்துடன் காணிகள் வழங்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய 100 நாட்களில் மலையக மக்களுக்கு காணிகளைப் பெற்றுக் கொடுக்க பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு நடவடிக்கை எடுத்தது.

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவைக்கு பத்திரம் சமர்ப்பித்து அங்கீகாரத்தை பெற்றுக் கொண்டார். சுமார் 200,000 பெருந்தோட்ட மக்களுக்கு இதன் மூலம் காணி உறுதிகள் வழங்கப்பட உள்ளன.

எதிர்வரும் 25ஆம் திகதி முதல்கட்டமாக 1000 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட உள்ளன. இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாக கலந்துகொண்டு பெருந்தோட்ட மக்களுக்கு காணி உறுதிகளை வழங்குவதுடன் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவும் ஊவா மாகாண முதலமைச்சர் ஹரீன் பெர்ணான்டோவும் இந்நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த 1000 காணி உறுதிப்பத்திரங்கள் பதுளை மாவட்டத்தில் உள்ள பெருந்தோட்ட மக்களை மையப்படுத்தியே வழங்கப்பட உள்ளதுடன் இரண்டாம் கட்டமாக நுவரெலிய மாவட்ட மக்களுக்கு வழங்கப்பட உள்ளது. “பசுமை பூமி” என்ற பெயரில் வழங்கப்பட உள்ள காணி உறுதிகள் கணவன், மனைவி ஆகிய இருவரின் பெயரிலேயே வழங்கப்பட உள்ளதுடன் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 7 பேர்ச்சஸ் காணி வழங்கப்படும்.

200 வருடகாலமாக பொருளாதாரத்துக்கு பங்களிப்பை வழங்கி வந்த மலையக மக்களுக்கு சொந்தமாக காணியோ, தனியான வீடுகளோ இன்றி வாழ்ந்தார்கள். அவர்களும் சமூகத்தில் தனியான வீட்டை நிர்மாணித்து கெளரவமாக வாழும் ஒரு சமுதாயமாக இருக்க வேண்டுமென்ற உன்னத நோக்கத்தில் புதிய அரசாங்கம் மிகக்குறுகிய காலத்தில் மலையக மக்களுக்கு காணி உறுதிகளை வழங்கியுள்ளமை வரலாற்றுச் சாதனை என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.