திருடர்களைப் பாதுகாப்பதற்கு பாராளுமன்றத்தை பயன்படுத்தாதீர்கள்

Wickremesinghe3பாராளுமன்றத்தை திருடர்களைப் பாதுகாக்கப் பயன்படுத்த வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சி எம்பிக்களிடம் நேற்றுக் கோரிக்கைவிடுத்தார். நாட்டில் மோசடி குறைந்துள்ளதால் பத்து வருடங்களின் பின் முதற் தடவையாக வாழ்க்கைச் செலவு குறைந்துள்ளதாகத் தெரிவித்த அவர், மோசடிகள் குறித்து விசாரணை நடத்த இடமளிக்கப் போவதில்லையென எதிர்க்கட்சி கோஷமிடுவதாகவும் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலஞ்ச மோசடி விசாரணை ஆணைக்குழுவால் விசாரணைக்கு அழைக்கப்பட்டமை தொடர்பான சர்ச்சை பாராளுமன்றத்தில் நேற்று இரண்டாவது நாளாகவும் தொடர்ந்தது. இதில் கருத்துத் தெரிவிக்கும்போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தை நீதியமைச்சரே நியமித்தார். பாராளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பில் சபாநாயகர் தனது தீர்ப்பை வெளியிட்டிருக்கிறார். ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன களமிறங்கியபோது அவரின் பாதுகாப்பு குறைக்கப்பட்டது. அவரைக் கொலை செய்வதற்கு புலிகள் முயற்சி செய்தார்கள். மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.

மக்களே அவருக்குப் பாதுகாப்பு வழங்கினார்கள். எமது அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷவுக்கும், சந்திரிக்கா குமார துங்கவுக்கும் போதியளவு பாதுகாப்பை வழங்கியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மார்கள் இருவரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்ல.

எந்தவொரு மோசடி குறித்தும் விசாரணை நடத்த இடமளிக்க மாட்டோம் என பந்துல குணவர்த்தன கூறுகின்றார். கடந்த காலத்தில் யார் திருட்டில் ஈடுபட்டார்கள். இன்று நாம் விசாரணை நடத்துகையில் அதற்குப் பயந்து சத்தம் போடுகின்றார்கள். இந்தப் பாராளுமன்றத்தை திருடர்களைப் பாதுகாக்கப் பயன்படுத் தாதீர்கள். திருடர்களைப் பாதுகாக்க திருடர்கள் முன்வந்திருக்கிறார்கள் என்றார்.