19042024Fri
Last update:Thu, 18 Apr 2024

பொதுத் தேர்தலுக்குப் பின்னர் உருவாகும் தேசிய அரசில் இனப்பிரச்சினைக்கு தீர்வு சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகள் உள்வாங்கப்பட்டதன் பின்பே தேர்தல் முறையில் மாற்றம் - ஜனாதிபதி

President Sirisenaதேர்தலின் பின்னர் உருவாக்கப்படும் தேசிய அரசாங்கத்தில் இனப்பிரச்சினை உட்பட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். “எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம் அமைக்கப்படு வது உறுதி. தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இது பற்றி கூறியிருக்கிறோம்.

 

உத்தேச தேசிய அரசாங்கத்தை இரண்டு வருடங்களுக்கு கொண்டு செல்வதுதான் எங்களது திடமான இலக்கு. ஆகவே இந்த தேசிய அரசில்தான் இனப்பிரச்சினை உட்பட சகல நெருக்கடியான பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும்” என ஜனாதிபதி கூறினார். ஊடக நிறுவனங்களின் தலைவர்கள், பத்திரிகை ஆசிரியர்களை ஜனாதிபதி நேற்றுக்காலை சந்தித்துப் பேசினார்.

 மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்பு முதற்தடவையாக இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிந்தது. இன்றைய அரசியல் நிலை தொடர்பாக இங்கு கருத்துத் தெரிவித்த அவர், உத்தேச தேர்தல் மறுசீரமைப்பு, அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாகவும் விளக்கினார்.அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தம் கிட்டத்தட்ட முடிந்து விட்டது. இன்னும் இரு வாரங்களில் இது முழுமையாகப் பூர்த்தியடைந்து விடும். 19வது திருத்தம் முழுக்க முழுக்க நாட்டு நலன் சார்ந்த திருத்தமாக இருக்கும். மேலும் இரண்டு வாரங்களுக்கு நாட்டு மக்களின் பார்வைக்கு இது விடப்படுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அரசியலமைப்பு திருத்தத்தில் பல்வேறு யோசனைகளை தான் முன்வைத்துள்ளதாக கூறிய ஜனாதிபதி, ஜனாதிபதியின் பதவிக்காலம், பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் ஆகியவற்றை 5 வருடங்க ளுக்குக் குறைக்க யோசனை தெரிவிக் கப்பட்டுள்ளது. 6 வருட பதவிக்காலம் உலகத்தில் வேறு எங்கும் இல்லை. நாட்டு நலன் கருதி இந்த யோசனைகளை முன்வைத் திருக்கிறேன் எனவும் சுட்டிக்காட்டினார்.

தேர்தல் முறை மறுசீரமைப்பு

தேர்தல் முறை மறுசீரமைப்பு தொடர்பாக ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், “தேர்தல் முறைமையிலும் திருத்தம் கொண்டு வரப்படுகிறது. ஜனாதிபதி தேர்தலின் போது இதனைத் தான் நாங்கள் கூறினோம். அதனையும் செய்து முடிப்போம். என்றாலும், தேர்தல் திருத்தம் தொடர்பில் இன்னும் கலந்துரையாடப்பட்டே வருகிறது” என்று கூறினார். சிறுபான்மைச் சமூகங்களினதும் சிறுபான்மைக் கட்சி களினதும் உரிமைகளும் அபிலாஷைகளும் உள்வாங்கப்பட்ட பின்பே தேர்தல் முறையில் மாற்றம் செய்யப்படுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஆனால் ஏப்ரல் 23க்கு முன்னர் இவைகள் உள்வாங்கப்படுமா? என்பது தொடர்பாக இந்தச் சந்திப்பின் போது தெளிவாகக் கூறப்படவில்லை. என்றாலும் வாக்குறுதிகளின் படி அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்பே தேர்தல் நடத்தப்படுமெனவும் கூறப்பட்டது.

தேர்தலில் சு.கவுக்கு பிரசாரம்

“பொதுத் தேர்தலின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்காக பிரசாரத்தில் இறங்குவேன்” எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதற்காக, கட்சிகளை கீழ்த்தரமாக விமர்சிக்கும் அரசியலில் ஈடுபடமாட்டேன் எனக் கூறினார்.தேசிய அரசாங்கம் அமைந்தாலும் தேர்தலில் சு.கவுக்காகப் பேசுவேன் என தேர்தல் காலங்களிலும் கூறினேன்.

நான் ஜனாதிபதி என்றாலும் ஒரு பொறுப்புள்ள கட்சியொன்றின் தலைவன்.கட்சித் தலைமையை நான் பலவந்தமாக எடுக்கவில்லை. தலைமை என்னையே நாடி வந்தது. ஆகவே, நான் சார்ந்த கட்சிக்காக தேர்தல் பிரசாரம் செய்வேன். ஆனால் ஐ.தே.க. உட்பட அனைத்துக் கட்சிகளையும் விமர்சிக்காது அரசியல் நாகரீகம் பேணப்படும்.

“தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம் தான் உருவாகும். ஆகவே தேர்தலின் போது நாகரீகமாக நடந்தால்தான் தேசிய அரசாங்கத்தை சரியாக வழிநடத்தக்கூடிய வாய்ப்பு ஏற்படும்” என்றும் ஜனாதிபதி விபரித்தார்.