28032024Thu
Last update:Mon, 04 Mar 2024

19 ஆவது திருத்தம் சபையில் நிறைவேற்றம்

ஆதரவு 212

எதிர் - 01

நடுநிலை - 01 சமுகமளிக்காதோர் - 10

WICKREMESINGHEநிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பது தொடர்பான Presidentஅரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டமூலம் நீண்ட இழுபறிக்குப் பின்னர் நேற்று பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

19ஆவது திருத்தச்சட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக 215 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டதோடு, ஒரு உறுப்பினர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. 7 உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் சமுகமளிக்காதிருந்தனர்.

19ஆவது திருத்தத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஈ.பி.டி.பி உள்ளிட்ட சகல கட்சிகளும் வாக்களித்தன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மாத்திரம் இதற்கு எதிராக வாக்களித் தார்.

சுயாதீன எம்பி அஜித் குமார வாக்களிப்பை புறக்கணித்திருந்த அதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எம்பிக்களான பிரேம்லால் ஜயசேகர, ஜனக பண்டார, ஜகத் பாலசூரிய, எல்லாவல மேதானந்த தேரர், கெஹலிய ரம்புக்வெல, பசில் ராஜபக்ஷ ஆகிய 6 பேரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்பியான அப்பாத்துரை விநாயகமூர்த்தி எம்பி உட்பட மொத்தம் 7 பேர் பாராளுமன்றத்துக்கு சமூகமளித் திருக்கவில்லை. இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இரவு 7.05 மணி முதல் 7.25 மணிவரை நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சபை குழுநிலையில் கூடி திருத்தங்கள் தொடர் பில் ஆராய்ந்ததோடு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 19ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுமா? இல்லையா? என நேற்றுமாலைவரை நிச்சயமற்ற நிலை காணப்பட்டபோதும் பல்வேறு சர்ச்சைகள் வாதப்பிரதிவாதங்கள் மற்றும் இழுபறி நிலைக்குப் பின்னர் இந்தச் சட்டமூலம் 2/3க்கும் அதிகமான பெரும்பான்மை யினால் நிறைவேற்றப்பட்டது.

19ஆவது திருத்தச்சட்டம் கடந்த மார்ச் மாதம் 24ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதனை விவாதத் துக்கு எடுப்பதற்கு இரண்டு தடவைகள் நாட்கள் குறிக்கப்பட்டபோதும் விவாதம் பிற்போடப்பட்டது. முதலில் ஏப்ரல் 9ஆம் 10ஆம் திகதிகளில் இறுதி நேரத்தில் இது பிற்போடப் பட்டது.

பின்னர் 20, 21ஆம் திகதிகளில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட போதும், மீண்டும் 27ஆம் திகதிக்கு விவாதம் ஒத்திவைக்கப் பட்டது. 19ஆவது அரசியலமை ப்புத் திருத்தச் சட்டம் தொடர்பான விவாதம் நேற்று முன்தினம் காலை ஆரம்பிக்கப்பட்டு இரண்டாவது நாளாக நேற்று மாலை 7 மணிவரை இடம்பெற்றது. திருத் தச்சட்டமூலம் மீதான விவாதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்துவைத்து உரையாற்றியிருந் தார்.

அதனைத் தொடர்ந்து ஆளும் தரப்பு எதிர்த்தரப்பு எம்பிக்கள் 19ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக கருத்து வெளி யிட்டதோடு, ஒரு சில எம்பிக்கள் அதனை கடுமையாக விமர்சித்திருந் தனர். மாலை 6.00 மணிக்கு வாக் கெடுப்பு இடம்பெற இருந்த போதும் விவாதத்தை மேலும் ஒரு மணி நேரத் தினால் நீடிக்க கட்சித் தலைவர்கள் தீர்மானித்தனர். சபைமுதல்வர் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இரண்டா வது வாசிப்பு மீதான விவாதத்துக்கு பெயர் குறிப்பிட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்கெடுப்பில் ஆதரவாக 215 வாக்குகளும் எதிராக 1 வாக்கும் அளிக்கப்பட்டன.

வாக்கெடுப்பைத் தொடர்ந்து குழு நிலையில் திருத்தங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன. அரசியலமைப்புத் திருத்தம் மூன்று மொழிகளிலும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குப் பெற்றுக்கொடுக்கப்படவில்லையென தினேஷ் குணவர்த்தன எம்பி சுட்டிக் காட்டியதைத் தொடர்ந்து சபை நடவடிக் கைகளை சபாநாயகர் 15 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார். மீண்டும் சபை கூடி குழுநிலையில் திருத்தங்கள் குறித்து நள்ளிரவுவரை ஆராயப்பட்டது.

19ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சி சார் பில் 174 திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன. எதிர்க்கட்சி சார்பில் 111 திருத்தங்களும், ஆளும் கட்சி சார்பில் 63 திருத்தங்களும் முன்வைக்கப்பட்டன. ரஜீவ விஜே சிங்க 55 திருத்தங்களையும், டபிள்யூ. டி.ஜே.செனவிரட்ன 29 திருத்தங்களை யும், வாசுதேவ நாணயகார 8 திருத் தங்களையும், சஜின்வாஸ் குணவர்த்தன 7 திருத்தங்களையும், டக்ளஸ் தேவானந்தா 8 திருத்தங்களையும், சிறியான விஜயவிக்ரம 2 திருத்தங்களையும், கீதாஞ்சன குண வர்த்தன மற்றும் தினேஷ் குணவர்த்தன ஆகியோர் தலா ஒவ்வொரு திருத்தங் களையும் முன்வைத்திருந்தனர். இவற்றில் பெரும்பாலான திருத்தங்களுக்கு இரு தரப்பும் இணக்கம் தெரிவித்தன.

ஆனால் அரசியலமைப்பு சபைக்கு பாராளு மன்றத்துக்கு வெளியிலிருந்து சுயாதீன மான நபர்களை நியமிப்பது மற்றும் பிரதமரின் ஆலோசனையுடன் அமைச் சரவையை நியமிப்பது என்ற இரண்டு சரத்துக்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட திருத்தங்களை ஏற்றுக் கொள்வதில் இரு தரப்புக்குமிடையில் இணக்கப்பாடு ஏற்படவில்லை.

முன்னதாக திருத்தங்கள் தொடர்பாக ஆராய்வதற்கு ஆறுபேர் அடங்கிய குழு வொன்று நியமிக்கப்பட்டிருந்தது. இந்தக் குழு நேற்றுமுன்தினம் இரவும் நேற்றுக் காலையும் கூடி ஆராய்ந்திருந்தது. குறித்த இரண்டு விடயங்கள் தவிர்ந்த ஏனைய திருத்தங்களுக்கு இணக்கப்பாடு எட்டப்பட்டது.

இதேவேளை, நேற்றுக் காலை பாராளுமன்றத்துக்கு வருகை தந்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்கெடுப்பு முடிவடையும்வரை பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் தங்கியிருந்து இழுபறிக்குக் காரணமா கவிருந்த திருத்தங்கள் தொடர்பில் சகல தரப்பினருடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக அறியவருகிறது.

இழுபறிக்குக் காரணமாகவிருந்த இரு திருத்தங்கள் தொடர்பிலும் இணக்கப்பாட்டை ஏற் படுத்துவது தொடர்பில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலும் சந்திப்பொன்று நடைபெற்றதாக அரசியல்வட்டாரங்கள் தெரிவித்தன.

19ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக உருவாக்கப்படும் அரசியலமைப்பு சபைக்கு பத்து உறுப்பினர்கள் நிய மிக்கப்படுவர். இதில் பிரதமர், சபாநாய கர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஜனாதிபதியின் பிரதிநிதி ஆகியோர் அடங்குவ தோடு, பிரதமரும், எதிர்க்கட்சித் தலை வரும் இணைந்து ஏனைய கட்சிகள் மற்றும் சுயாதீனக் குழுக்களின் இணக்கப்பட்டுடன் சுயாதீன நபர்கள் ஐவரை நியமிப்பதற்கு ஆரம்பத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்புத் திருத்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஜனாதிபதியின் அதிகாரத்தை பாரா ளுமன்றத்துக்கு வழங்காமல் வெளி நபர்களுக்கு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த எதிர்த்தரப்பினர், இதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால், சுயாதீனமான வெளிநபர்களே இதற்கு நியமிக்கப்பட வேண்டும் எனவும், அரசியல்வாதிகளை நியமிப்பதானது மீண்டும் அதனை அரசியல்மயமாக்கி விடும் என அரச தரப்பில் சுட்டிக்காட்டப் பட்டது.

நேற்றுமாலை இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளையடுத்து அரசியல மைப்பு சபைக்கு நியமிக்கும் 10 பேரில் ஏழு பேர் பாராளுமன்ற உறுப்பினர்களா கவும், மூவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் அற்ற சுயாதீனமான நபர்களாகவும் அமையும் வகையில் திருத்தம் செய்ய உடன்பாடு எட்டப்பட்டது.

இதேவேளை, பிரதமரின் ஆலோச னையுடன் அமைச்சர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற திருத்தத்திற்கும் எதிர்த்தரப்பு கடுமையான ஆட்சேப னையை தெரிவித்திருந்தது. ஆனால் அந்தத் திருத்தம் சிறிய மாற்றத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

குழுநிலை சந்தர்ப்பத்தில் எதிர்த்தரப் பினால் முன்வைக்கப்பட்ட அனேக திருத்தங்களுக்கு உடன்பாடு காணப் பட்டது. சுயாதீன ஆணைக்குழுக்கள் பாராளுமன்றத்துக்குப் பொறுப்புக்கூற வேண்டும் என திஸ்ஸ வித்தாரண எம்பி கொண்டுவந்த திருத்தத்துக்கு ஆளும்தரப்பு முதலில் எதிர்ப்புத் தெரிவித்தபோதும், இறுதியில் தேர்தல் ஆணைக்குழு தவிர ஏனைய ஆணைக் குழுக்கள் பாராளுமன்றத்துக்குப் பொறுப்புக்கூறவேண்டும் என திருத்தம் செய்ய இணக்கம் காணப்பட்டது.

தேசிய அரசாங்கம் உருவாகும் பட்சத்தில் அமைச்சர் களின் தொகையை அதிகரிக்கும் திருத்தத்துக்கு எதிர்தரப்பு ஆட்சேபனை தெரிவித்தபோதும், இறுதியில் அமைச் சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திருத்தத்துக்கு உடன்பாடு எட்டப்பட்டது.

19ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு அமைய தகவல் அறியும் உரிமை மக்களுக்குப் பொற்றுக்கொடுக்கப் படவுள்ளது, ஜனாதிபதியின் பதவிக்கா லம் 6 வருடங்களிலிருந்து 5 வருடங் களாகக் குறைக்கப்படுகிறது. ஜனாதிபதி பாராளுமன்றத்துக்குப் பொறுப்புக் கூறக் கடமைப்பட்டவராவார், ஜனாதிபதி சட்டத்துக்கு கட்டுப்பட்டவராக இருப்பார், பாராளுமன்றத்தின் பதவிக்காலம் 6 வருடங்களிலிருந்து 5 வருடங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.

4 1/2 வருடங்களின் பின்னரே பாராளுமன்றத்தை ஜனா திபதியால் கலைக்கமுடியும், அவசர சட்டங்கள் கொண்டுவரப்படுவது நீக்கப்பட்டுள்ளது, தேர்தல் சட்டங்களுக்கு அமைய செயற்படாத தனியார் ஊடகங்களுக்கு தண்டனை வழங்குவது தொடர்பான சரத்து நீக்கப்பட்டுள்ளது.