19 ஏழு உப பிரிவுகளுக்கு சர்வஜன வாக்கெடுப்பு

உச்ச நீதிமன்றம் வியாக்கியானம்

19ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் அரசியலமைப்பிற்குட்பட்டது என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதில் உள்ள இரு சரத்துக்களிலுள்ள 7 உப பிரிவுகளை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என உச்ச நீதிமன்ற வியாக் கியானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

அமைச்சரவையின் தலைவராக பிரதமரை நியமிப்பது, அமைச்சர்களினதும் அமைச்சுக்களினதும் எண்ணிக்கை மற்றும் அவற்றின் விடயதானம் மற்றும் பணிகளைத் தீர்மானித்தல், பாராளுமன்ற உறுப்பினர்களில் இருந்து அமைச்சரவையின் உறுப்பினர்களாக இல்லாதவர்களை அமைச்சராக நியமிக்கலாம், உட்பட 7 உப பிரிவுகள் இதில் அடங்கும். 7 உப பிரிவுகளும் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பாராளுமன்றம் நேற்று சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் தலைமையில் கூடியது. இதன் போது உச்ச நீதிமன்ற வியாக்கியானம் குறித்து அறிவித்த சபாநாயகர் மேலும் கூறியதாவது, 19ஆவது திருத்தம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. 19ஆவது திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்பின் 81 (1) ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளுடன் இணங்குகின்றன. அரசியலமைப்பின் 82 (5) ஆம் உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ள விசேட பெரும்பான்மை வாக்குகளால் (2/3) நிறைவேற்றப்பட வேண்டும்.

11 ஆவது சரத்தின் 42 (3), 43 (1), 43 (3), 44 (2), 44 (3) மற்றும் 44 (5) ஆகிய உப பிரிவுகள் மற்றும் 26 ஆவது சரத்தின் 104 ஆ (5) (இ) உப பிரிவும் அரசியலமைப்பின் 83 ஆவது உறுப்புரையின் பிரகாரம் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் மக்களின் அங்கீகாரத்தை பெற வேண்டியுள்ளது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்றார்.

எம்.பிக்களின் கருத்து

உச்ச நீதிமன்ற வியாக்கியானம் தொடர்பில் ஆளும் தரப்பு எதிர்த்தரப்பு எம்.பிகள் சபையில் கருத்துத் தெரிவித்தனர். முதலில் இது குறித்து கருத்துத் தெரிவித்த ஜி.எல். பீரிஸ் (எம்.பி) ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அதிகாரம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மார்ச் 24 ஆம் திகதி பிரதமரினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 19 ஆவது திருத்தத்தில் அகற்றப்பட்டிருந்த பிரிவுகள் பின்னர் மீண்டும் சேர்க்கப்பட் டுள்ளன.

வர்த்தமானியில் வெளியிடப்பட்ட சட்ட மூலத்தின் அடிப்படையில் 19 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. வர்த்தமானியில் உள்ள விடயங்களினடிப் படையிலேயே சட்டத்தரணிகள் தமது வாதங்களை முன்வைத்தார்கள். ஆனால், சட்டமா அதிபர் 12 பக்கம் கொண்ட புதிய திருத்தங்கள் சிலவற்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். இதிலுள்ள விடயங்கள் மக்களுக்கு தெரியாது. எனவே, அவை தொடர்பில் வழக்கு தொடராகவும் சந்தர்ப்பம் கிடைக்க வில்லை.

குழுநிலை விவாதத்தின் போதே இவ்வாறு புதிய திருத்தங்களை முன்வைக்க முடியும்.சபாநாயகர் ஏதும் சட்டமூலம் தொடர்பில் கையெழுத்திட்ட பின்னர் எவருக்கும் அது குறித்து சவால் விட முடியாது. திருத்தங்களை துண்டு துண்டாக முன்வைக்காமல் அனைத்தையும் சேர்த்து முழுமையான சட்டமூலமொன்றை முன்வைக்க வேண்டும். எதிர்காலத்தில் பிரச்சினை எழாத வகையில் இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் 19 ஆவது திருத்தம் அமைக்கப்பட வேண்டும். புதிதாக செய்துள்ள திருத்தங்கள் தற்பொழுதுள்ள யாப்பிற்கு முரணானதாகும் என்றார்.

ரத்ன தேரர்

வண. ரதன தேரர் (ஐ.ம.சு.மு.) குறிப் பிட்டதாவது, மக்களுக்கு அர்த்தபுஷ்டி யான யாப்பொன்றை வழங்க வேண்டும். ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை குறைக்க வேண்டும் என்பதே சகலரதும் நோக்கமாகும். 19 ஆவது திருத்தத்திற்கு புதிய திருத்தங் களை சட்ட மா அதிபர் நீதிமன்றத்தில் முன்வைத்தார். அது ஆங்கில மொழியில் மட்டுமே முன்வைக்கப்பட்டன. தமிழ், சிங்கள மொழிகளில் அவை சமர்ப்பிக் கப்படவில்லை.

பாராளுமன்ற சம்பிரதாயங்களை நன்கு அறிந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, 19 ஆவது திருத்தத்தை நிறைவேற்றும் நடவடிக்கைக்கு தலைமை வகிப்பார் என நம்பினாலும் அவர் அதனை மீறியுள்ளார். தனக்கு அதிகாரங்களை காட்டிக்கொள்ளும் வகையில் யாப்பு திருத்தத்துக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுசில் பிரேம் ஜெயந்த் (ஐ.ம.சு.மு)

அரசியலமைப்பு திருத்தத்திலுள்ள நல்லாட்சி தொடர்பான அம்சங்கள் தொடர்பில் எமக்கு பிரச்சினை கிடையாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைக்குப் பதிலாக வெஸ்ட் மினிஸ்டர் முறை அல்லது வேறு ஒரு முறைமை தயாரிக்கப்பட வேண்டும். 1972 ஆம் ஆண்டு அரசியலமைப்பு 2 வருடங்கள் ஆராயப்பட்ட பின்னரே நிறைவேற்றப் பட்டது. 1978 யாப்பும் அவ்வாறே நிறைவேற்றப்பட்டது.

ஜனாதிபதியின் சில அதிகாரங்களை பிரதமருக்கு வழங்கும் முயற்சி காரணமாகவே 19 ஆவது திருத்தத்தின் சில உப பிரிவுகளுக்காக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டு மென உச்ச நீதிமன்றம் அறிவித் துள்ளது. அரசாங்கம் மேலதிகமாக சேர்த்த திருத்தங்களையும் ஆராய்ந்தே உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக கருதுகிறோம்.

ரஜீவ விஜேசிங்க (ஐ.ம.சு.மு)

நல்லாட்சிக்கான அம்சங்களை அரசாங்கம் மீறியுள்ளது. தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஜனாதிபதி வாக்களித்தவை மீறப்பட் டுள்ளது. அமைச்சரவை அனுமதியளித்த விடயங்கள் புதிய திருத்தங்களினூடாக மாற்றப்பட் டுள்ளது.

அமைச்சர் ரவூப் ஹக்கீம்

19 ஆவது திருத்தம் தொடர்பில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் மீண்டும் உச்ச நீதிமன்றத்திடம் வியாக்கியானம் கோருமாறு எதிர்த்தரப்பு கோருகிறது. இதற்கு முன்னர் இவ்வாறு நடந்தது கிடையாது. மீண்டும் நீதிமன்ற வியாக்கியானம் கோர தேவையில்லை.

அநுர குமார திசாநாயக்க (ஜ.தே.மு)

19ஆவது அரசியலமைப்பு திருத்தமானது எமது ஜனநாயக கட்டமைப்பை பலப்படுத்தும் பிரதானமான நடவடிக் கையாகும். 19 ஆவது திருத்தத்திலுள்ளவற்றை முழுமையாக ஏற்காதிருக்கலாம். அல்லது சகல நோக்கமும் இதனால் நிறைவேறாமல் இருக்கலாம். ஆனால் ஜனநாயக முறைகள் பின்பற்றி இதனை முன்னெடுக்க வேண்டும்.

தினேஷ் குணவர்தன (ஐ.ம.சு.மு.)

அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் எம்மிடையே பாரிய முரண்பாடு கிடையாது. 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை திருத்தும் முறையை மாற்ற வேண்டாமென்றே கோருகிறோம். அரசாங்கம் புதிதாக முன்வைத்த திருத்தங்களை ஏற்க முடியாது என நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் கூறியிருந்தனர்.

அமைச்சர் நவீன் திசாநாயக்க

நீதிமன்றம் சுதந்திரமாக செயற் படுகிறது. தொலைபேசி அழைப்புகள் எதுவும் உச்ச நீதிமன்றத்திற்கு செல்லவில்லை.18ஆவது திருத்தத்திற்கு ஆதரவளித்து நாம் செய்த தவறை தற்பொழுது உணர்கிறேன். அன்று செய்த தவறை திருத்துவதற்கு இன்று அவகாசம் கிடைத்துள்ளது. 19 ஆவது திருத்தத்தினூடாக ஜனாதிபதியின் அதிகாரம் பாராளு மன்றத்திற்கு வழங்கப்படுகிறது. அரசியல் நோக்கமின்றி இதனை நிறைவேற்ற முன்வர வேண்டும். தற்பொழுது இதனை செய்யாவிட்டால் வரலாறு எம்மை சபிக்கும்.