மறைக்கப்பட்ட ரூ.1151 பில். செலவீனம் கண்டுபிடிப்பு

colravi202056836 4050693 29022016 kll cmyகடந்த அரசாங்க காலத்தில் மேற்கொள்ளப்பட்ட 1151 பில்லியன் ரூபா செலவீனங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியிருப்பதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்துக்குக் கூடத் தெரியப்படுத்தாது இந்த செலவீனங்கள் மறைக்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டிய அவர், மக்கள் மீது சுமையை ஏற்படுத்தாது இதனை ஈடுசெய்வது குறித்து அமைச்சரவையில் கலந்துரையாடவிருப்பதாகவும் கூறினார்.

நிதியமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இத்தகவல்களை வெளியிட்டார். 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் கடந்த அரசாங்கத்தால் உரிய நடைமுறையைப் பின்பற்றப்படாது பெறப்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டுக் கடன்கள் உள்ளிட்ட செலவீனங்கள் 1146 பில்லியன் ரூபாவாவெனக் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று (29) அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கவின் அமைச்சு கடந்த 2013ஆம் ஆண்டு தமது அமைச்சினால் செலுத்த வேண்டிய 5423 மில்லியன் ரூபா குறித்த தகவலை நீதி அமைச்சுக்கு அறிவித்தார். இதற்கமைய கடந்த அரசாங்கம் உரிய நடைமுறையைப் பின்பற்றாது பெற்றுக்கொண்ட கடன்கள் உள்ளிட்ட 1151 பில்லியன் ரூபா செலவீனத்தை ஈடுசெய்யவேண்டிய பொறுப்பு எமது அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து சர்வதேச நாணய நிதியத்திடம் கேட்டபோது, தமக்குக் கூட இந்த செலவீனங்கள் மறைக்கப்பட்டிருப்பதாகக் கூறினர். சர்வதேச நாணய நிதியத்தைக் கூட ஏமாற்றி கடந்த அரசாங்கம் பாரிய செலவீனங்களை மறைத்துள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இவற்றில் வெளிநாடுகளில் பெற்றுக்கொண்ட கடன்களும் காணப்படுகின்றன. அரசாங்கம் என்ற ரீதியில் இன்னொரு நாட்டுடன் செய்துகொண்ட உடன்படிக்கைகளை முறித்துக்கொள்ள முடியாது. இவ்வாறான சூழ்நிலையில் கடந்த அரசாங்கத்தின் கடன்கள் எனக் கூறி அவற்றை செலுத்தாமல் இருக்கவும் முடியாது. எனவே மக்களுக்கு சுமையை ஏற்படுத்தாது எவ்வாறு இவற்றை ஈடு செய்வது என்பதை அமைச்சரவையிலேயே முடிவு செய்ய வேண்டும்.

மஹிந்த நிர்வாகத்தில் பல திட்டங்கள் இறுதி நேரத்தில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதியைப் பெற்று உரிய நடைமுறைகள் பின்பற்றப்படாமல் செலவு செய்யப்பட்டுள்ளன. இவற்றுக்கு முன்னாள் நீதியமைச்சர் மஹிந்த ராஜபக்‌ஷ, முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ, முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் முன்னாள் நிதியமைச்சின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர ஆகியோரே பொறுப்புக் கூறவேண்டும்.

கடந்த அரசாங்கத்தின் இந்த மோசடி வேலையை பாராளுமன்றத்திற்கும், சர்வதேசத்துக்கும் வெளிப்படுத்த வேண்டும். கண்டுபிடிக்கப்பட்ட செலவீனங்கள் குறித்த விரிவான தகவல்களை விரைவில் வெளியிட எதிர்பார்த்திருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்த விடயம் குறித்து விசாரிப்பதற்கு சர்வதேச நாணய நிதியம் தடயவியலாளர்களை வரவழைப்பது குறித்தும் ஆராய்ந்து வருகின்றனர். இருந்தாலும் மக்களுக்கு சுமையை செலுத்தாது இச்செலவீனத்தை ஈடுசெய்யும் வழியை கண்டுபிடிக்கவேண்டியிருப்பதாகவும் கூறினார்.