29032024Fri
Last update:Mon, 04 Mar 2024

கொத்தணி குண்டு புதிய ஆதாரம்

81a3zeid raad al hussein reuters 650 650x400 71425565930 28062016 kaa cmyஇலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் கொத்தணி குண்டுகள் பயன்படுத்தப்பட்டமைக்கான புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்யத் அல் ஹூசைன் வலியுறுத்தியுள்ளார்.

மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையில் கொத்தணி குண்டுகள் குறித்த குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன. தற்பொழுது இதற்கான புதிய ஆதாரங்கள் வெளியாகியிருப்பதால் இது பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனீவா மனித உரிமை பேரவையில் நடைபெற்றுவரும் 32ஆவது அமர்வில் இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இன்றையதினம் வாய்மூல அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவுள்ளார்.

இந்த அறிக்கையின் முன்கூட்டிய வடிவமொன்று நேற்று வெளியாகியிருந்தது. இந்த அறிக்கையிலேயே மேற்குறிப்பிட்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வருடம் பெப்ரவரி மாதம் இலங்கைக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தில் அறிந்துகொண்ட விடயங்களை உள்ளடக்கியதாக இந்த அறிக்கை அமைந்துள்ளது.

நீதிப் பொறிமுறையில் சுயாதீனமான, பக்கச்சார்பற்ற விசாரணைகளை உறுதிப்படுத்துவதற்கு சர்வதேச நீதிபதிகள் மற்றும் விசாரணையாளர்களின் பங்குபற்றுதல் அவசியம் என்ற நிலைப்பாட்டில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் உறுதியாக இருப்பதாகவும், அரசியலமைப்பு மறுசீரமைப்பை மேற்கொள்ளும் அரசியல் செயற்பாடானது இடைமாற்று பொறுப்புக் கூறல், இடைமாற்று கால நீதி மற்றும் மனித உரிமை ஆகிய விடயங்களில் அடிப்படையானவற்றை சமரசம் செய்யும் வகையில் அமைந்துவிடக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இணக்கப்பாட்டு அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 18 மாதங்கள் கடந்துள்ள நிலையில் அரசியலமைப்பை மாற்றுவதற்கு ஏதுவாக அரசியலமைப்பு சபை அமைக்கப்பட்டுள்ளமையை வரவேற்றிருக்கும் ஹூசைன், இந்த செயற்பாடானது கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் மீண்டும் ஏற்படாது தவிர்ப்பதற்கும், மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும், பொறுப்புக் கூறும் செயற்பாடுகள் மற்றும் இடைக்கால நீதிப் பொறிமுறையை உறுதிப்படுத்துவதாகவும் அமைய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் பல்வேறு முக்கியமான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது. பல தசாப்தங்களுக்குப் பின்னர் தேசிய கீதம் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் இசைக்கப்பட்டுள்ளது. யுத்த வெற்றுக் கொண்டாட்டங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய நினைவு நிகழ்வுகளாக மாற்றம்பெற்றுள்ளன.

தன்னைக் கொல்லவந்த எல்.ரி.ரி.ஈ சந்தேகநபரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கியமை என பல்வேறு நிகழ்வுகள் வரவேற்கும் வகையில் அமைந்துள்ளன. இவ்வாறான செயற்பாடுகள் ஒருவர் மீது மற்றொருவர் நம்பிக்கை கொள்வதற்கான நிகழ்வுகளாக அமையும் என ஹூசைன் நம்புவதாகவும், இருந்தபோதும் 'சிங்ஹலே' ஸ்டிக்கர் பிரசாரம் மற்றும் மதஸ்தலங்கள் மீதான தாக்குதல்கள் போன்ற இனவாதத்தைத் தூண்டும் சம்பவங்கள் மேலும் தலைதூக்காது கட்டுப்படுத்தப்பட வேண்டும் என விரும்புவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேநேரம், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மையினர் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கு உறுதியான நடவடிக்கைகளின் வேகம் போதுமானதாக இல்லையென்றும், உறுதியளிக்கப்பட்ட காணிகள் முழுமையான விடுவிக்கப்படாததுடன், பாதுகாப்புத் தரப்பினரின் ஒத்துழைப்பு குறைவாக உள்ளது என்ற முறைப்பாடு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை விஜயத்தின் போது சுட்டிக்காட்டப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படும் என இலங்கை அரசாங்கம் உறுதிமொழி வழங்கியிருந்தது. இச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட தமிழ் சமூகத்தினர் இன்னமும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். 2015 -2016ஆம் ஆண்டு காலப் பகுதியில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பயன்படுத்தி 40 இற்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை ஆணையாளரின் இலங்கை விஜயத்தின் போது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இவ்வாறான செயற்பாடுகள் மக்களின் சாதாரண வாழ்க்கையை சுமூகமாக முன்னெடுப்பதற்கு இராணுவக் குறைப்பை மேற்கொள்வதில் அரசாங்கம் சவால்களை எதிர்கொள்கின்றமையை எடுத்துக்காட்டுகிறது. காவலரண்கள் சில நீக்கப்பட்டமை வரவேற்கத் தக்க வகையில் இருந்தாலும், இராணுவப் பிரசன்னம் மற்றும் கண்காணிப்புக்கள் அதிகமாக இருக்கின்றது. புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர்கள் மீண்டும் விசாரிக்கப்படுகின்ற சம்பவங்களும் இடம்பெறுகின்றன.

சாட்சிகளைப் பாதுகாக்கும் சட்டம் நீண்டகால இழுபறியின் பின்னர் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும் இதில் மேலும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டியுள்ளது. சர்வதேச மட்டத்தில் சாட்சியங்களைக் காப்பாற்றக் கூடிய சட்டங்களை விரைந்து நிறைவேற்றுமாறும் ஹூசைன், இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கைவிடுத்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிக்கு அமைய இடைமாற்றுகால நீதிப் பொறிமுறையை அமைப்பதற்கு சட்ட ரீதியான மற்றும் சட்டரீதியற்ற செயற்பாடுகளுக்கான தயார்ப்படுத்தல்களில் ஈடுபட்டுள்ளது. இந்த செயற்பாடுகள் சரியான தெளிவின்மையால் அமைச்சர்கள் மற்றும் நிறுவனங்களால் மேவப்படும் சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. அரசாங்கம் பல்வேறு இடைமாற்றுகால நீதிப் பொறிமுறையை ஆராய்ந்து வருகிறது. காணாமல் போனவர்கள் குறித்த அலுவலகமொன்றை அமைப்பதற்கான விரைந்த செயற்பாடுகள் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படுகின்றன.

30/1 பிரேரணையில் உறுதிமொழி வழங்கப்பட்ட முக்கியமான விடயங்களை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் எடுத்திருக்கும் செயற்பாடுகள் பாராட்டப்படுகின்றன. உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் ஒருங்கிணைந்த, வரிசைப்படுத்தப்பட்ட மூலோபாயத்தைக் கொண்டதாக அமைய வேண்டும்.

இந்த மூலோபாயமானது அரசாங்கத்துக்குள் ஒருங்கிணைப்புக்கான ஏற்பாடுகளைக் கொண்டதாகவும், சர்வதேச உதவி வழங்குனர்களின் ஒத்துழைப்புகளைப் பெறக்கூடியதாகவும் அமைய வேண்டும்.

இடைக்கால மாற்று நீதி பொறிமுறையில் சிவில் சமூகத்தின் பங்களிப்பை உறுதிப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும்.

இவை வெளிப்படைத் தன்மை கொண்டதாகவும், அர்த்தமுள்ள இடைக்கால மாற்று நீதிப் பொறிமுறையை கொண்டதாகவும் அமைய வேண்டும். இதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் தொடர்ந்தும் ஒத்துழைப்புக்களை வழங்கும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.